சீனாவின் எவர்கிராண்டே நிறுவனம் மூடப்படுகிறது?
சீன பொருளாதாரம்... மிக பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.. இப்போது இது உலக நாடுகளுக்கு தெரிந்து வருகிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக விளங்குவது எவர்கிராண்ட் என்ற பிரமாண்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சரிவு. பல ஆண்டுகளாக, சீனாவின் முக்கிய சொத்து மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாக எவர்கிராண்ட் திகழ்ந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், கட்டுப்பாடற்ற விரிவாக்கமும் அதீத கடன் சுமையும் நிறுவனத்தை முடக்கிவருகிறது.
இவ்வளவு காலம் பத்திரிகை பலத்தை அதாவது பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து தான் பெரிய ஆள் போல் பந்தா காட்டி வந்த சீனா, சீட்டுக்கட்டு போல் சரியும் தன் நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாமல் தடுமாறி வருகிறது.
பொதுவாகப் பெரிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தால் அதைச் சார்ந்துள்ள கிளை நிறுவனங்கள், சப்ளையர்கள், கடன் கொடுத்தவர்கள், கடைநிலை ஊழியர்கள் வரையிலான பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக பங்குசந்தையில் பணம் போட்டவர்கள் அதோகதி ஆகிவிடுவார்கள்.
ஒரு காலத்தில் சீனாவின் எவர்கிராண்டே தான் அந்நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்தது, ஆனால் இன்று சீன பொருளாதாரத்தின் ஏழரை சனியாக மாறி நிற்கிறது அதே நிறுவனம். எவர்கிராண்டே நிறுவனம் 2021 முதல் அதீத கடன் பிரச்சனை காரணமாகத் தவித்து வருகிறது.
எவர்கிராண்ட் வீழ்ச்சிக்கான காரணங்கள்
அதீத கடன்: சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையின் அசுர வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்ட எவர்கிராண்ட், குறுகிய காலத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டது. அதற்கான நிதி பெரும்பாலும் கடன்கள் மூலமே திரட்டப்பட்டது. எவர்கிராண்ட் நிறுவனத்தின் தற்போதைய மொத்த கடன் சுமை 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது.
அரசின் கட்டுப்பாடுகள்: கடந்த சில ஆண்டுகளில், வீட்டுவசதித் துறையில் அபாயகரமான கடன் அளவை கட்டுப்படுத்தவும், விலைகளை சீராக வைத்திருக்கவும் சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நிதி மற்றும் கடன் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்த மட்டுப்படுத்தும் கொள்கைகளால் எவர்கிராண்ட் போன்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
விற்பனையில் சரிவு: சீன அரசின் நடவடிக்கைகள் வீட்டுவசதிச் சந்தையில் விற்பனையைப் பாதிக்கத் தொடங்கின. முன்பு போட்டி போட்டு ப்ரீ-புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் இல்லாததால் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதும், நிலுவையில் உள்ள திட்டங்களை முடிப்பதும் எவர்கிராண்டிற்கு பெரும் சவாலாக மாறியது
முதலீட்டாளர்களின் நம்பிக்கை இழப்பு: எவர்கிராண்ட்டின் நிதி நெருக்கடிகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன, மேலும் கடன் பத்திரங்களை விற்க முடியாமல் நிறுவனம் மேலும் தத்தளித்தது.
பெரும் கடனில் சிக்கியிருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே-வை மூடப்படவும், அதன் சொத்துக்களை விற்று விட்டு மொத்த நிறுவனத்தையும் Liquidate செய்யவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எவர்கிராண்டே பங்குகள் சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்த காரணத்தால் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. எவர்கிராண்டே நிறுவனத்தின் கடன் பிரச்சனை, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையைப் பாதிப்பதைத் தாண்டி சீன பொருளாதாரத்தையும் ஆட்டி வைக்கிறது.
எவர்கிராண்டே தனது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காத காரணத்தால், அதன் மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இதனால் இந்நிறுவனம் மூடப்படலாம் என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எவர்கிராண்டே, Country Garden ஆகியவற்றின் வீழ்ச்சி சீனாவின் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட், நிதி சேவை, கட்டுமான பொருட்கள் சப்ளையர்கள் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை பெரும் வீழ்ச்சியில் தள்ளி உள்ளது. மேலும் முதலீட்டுச் சந்தைக்குப் பெரிய ஷாக் கொடுத்துள்ளது.
தோல்வியின் விளிம்பில் உள்ள அந்த நிறுவனம் வீழ்ந்தால் உலகிற்கு தன பொருளாதார நிலை தெரிந்து விடும் என்று அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற சீன அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது, குறிப்பாக குறிப்பிட்ட அளவிலான நிதி உதவிகளையும், கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தையும் நீடித்து வழங்கியது. இப்படிப் பல சலுகைகளைக் கொடுத்தது. ஆனால் சீன மக்கள் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காடடவில்லை,
இதனால் அரசின் சலுகைக்கு எவ்விதமான பயனும் இல்லாமல் போனது, எவர்கிராண்டே சொத்துக்கள் விற்க முடியாமல் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில் எவர்கிராண்டே வெளிநாட்டில் இருந்து கடனை பெற கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெகா திட்டத்தைத் தீட்டியது, ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.
காரணம் சீனா பொருளாதாரம் வீழ்ந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.. வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. சீனர்கள் வேலை தேடி வெளிநாட்டுக்கு போகும் சூழ்நிலையாகி விட்டது. வேலை கிடைப்பதும் நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதும் குதிரைக் கொம்பாக இருக்கிறது என்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்க் கூறியுள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவர்கிராண்ட் நிறுவனத்தின் வீழ்ச்சி சீன பொருளாதாரத்திலும் உலகளாவிய அளவிலும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
சீனாவின் ரியல் எஸ்டேட் துறை:
சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரியல் எஸ்டேட் துறை விளங்குகிறது. எவர்கிராண்ட் போன்ற பெரிய நிறுவனத்தின் வீழ்ச்சி, இத்துறையிலேயே நம்பகத்தன்மை குறித்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் முதலீடு, விற்பனை சற்று பாதிக்கப்படலாம்.
சீன நிதி அமைப்பு:
எவர்கிராண்ட் சீனாவின் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடன்பட்டுள்ளது. இக்கடன் திருப்பி செலுத்தப்படாவிட்டால், தீயகடன்கள் உயர்ந்து நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாகலாம்.
உலகளாவிய பொருளாதாரம்:
கட்டுமானப் பொருட்களின் முக்கிய நுகர்வோராக சீனா உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இறக்குமதி குறைந்து, இரும்புத் தாது போன்ற மூலப்பொருட்களின் சர்வதேச சந்தைகளை குலைக்க கூடும்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1467 முக்கிய வெளிநாட்டு கம்பெனிகள் சீனாவில் இருந்து வெளியேறி விட்டன. சில கம்பெனிகள் தன் சொந்த நாட்டுக்கு குடியேறி விட்டது. சில கம்பெனிகள் இந்தியாவிற்கு இடம் பெயர்த்து விட்டன. மேலும் லட்சக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.