11 வயசு பையன் செய்யற வேலையா இது..? ஆச்சர்யம் கலந்த உண்மை..!
11 வயதில் இந்த சிறுவனின் முதிர்ச்சி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.;
சிரோவிடம் ஆலோசனை பெறும் நியூயார்க் போலீஸ்காரர் ஒருவர். (அடுத்த படம்) சிரோ
நாம் கற்றதை அல்லது அறிந்ததை திரும்பக் கொடுப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இது ஒரு நல்ல வழி என்கிறான் இந்த 11 வயது சாலையோர ஆலோசகர்.
அட..ஆமாங்க . சிரோ ஓர்டிஸ் (142 செ.மீ.உயரம்) புஷ்விக் (Ciro Ortiz Bushwick) ஆறாம் வகுப்பு மாணவன். இவர் புரூக்ளினில் உள்ள பெட்ஃபோர்ட் எல் ரயில்வே ஸ்டேஷனில் விருப்பமுள்ள பயணிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறான். ஒரு முறை ஆலோசனைக்கான கட்டணம் வெறும் 2 டாலர் வாங்குகிறான். ஒருவருக்கு ஐந்து நிமிட அமர்வில் "உணர்ச்சிமிகு ஆலோசனை" வழங்குகிறான். அவனது அலுவலக நேரம் மதியம் தொடங்கி 2 மணி வரை இருக்கும்.
'நாம் கற்றதை அல்லது அறிந்ததை திரும்பக் கொடுப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் இது ஒரு நல்ல வழி' என்கிறான் இந்த 11 வயது சாலையோர ஆலோசகர். ஒரு நாள் ஒரு மதிய நேரம் திருமணமான ஒரு ஜோடி ஆலோசனைக்காக சிரோவின் "பீனட்ஸ்" விற்பனை பாணி விளம்பர அட்டைக்கு முன்பாக நின்றது. சிரோவிடம், "சமீப காலமாக எனது மனைவி சைவ உணவு சாப்பிடுகிறாள். அது எனக்கு பிடிக்கவில்லை' என்று கணவன் முறையிட்டான்.
அதற்கு சிரோ, 'நீங்கள் இறைச்சி சாப்பிடுவதற்காக உங்கள் மனைவி கோபப்படவில்லையே. அவர் விரும்புவதை அவர் சாப்பிட விரும்புகிறார். நீங்கள் விரும்புவதை நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்கள். நீங்கள் விரும்புவதை சாப்பிடுவதைப்போல உங்கள் மனைவி அவர் விரும்புவதை சாப்பிடக்கூடாதா? இது எப்படி உங்களுக்குள் கருத்துவேறுபாடானது? என்று சிரோ, போட்டானே ஒரு போடு. அலறியடித்த ஜோடி அமைதியாக, 2 டாலரை கொடுத்து விட்டு நகர்ந்தது, மகிழ்ச்சியோடு.
கடந்த காலத்தில், சிரோ பள்ளியில் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.அந்த துன்புறுத்தலில் துவண்டு வீழாமல், அனுபவங்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான். அந்த துன்புறுத்தல் பாடங்களே அவனுக்கு ஆலோசனை வழங்கத் தூண்டியது.
சிரோவின் அம்மா(35) ஒரு கவிஞர். அவர் நியூயார்க் போஸ்ட் -இடம் கூறும்போது, "சிரோ மிகவும் உணர்திறன் உடையவன். ஆழ்ந்த ஞானம் உடையவன். அவன் நிறைய கஷ்டப்பட்டான். முதல் வாரம் ஆலோசனை வழங்கச் சென்றபோது கூட பதட்டமாக இருந்தான். ஆனால், அடுத்தடுத்த ஞாயிறுகளில் அவன் 50டாலர்கள் வரை சம்பாதித்தான். 'இன்று பல அற்புதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்' என்றான் பெருமையோடு.
அவன் எந்த வகுப்பிலும் பாடங்களை படிக்கவில்லை.ஆனால், அவன் முதிர்ச்சியடைந்தவனாக இருக்கிறான். தான் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனத்தின் இயக்குனர் என்று அவனது தந்தையிடம் பெருமையாக கூறுவான். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சாதாரணமாக சிரோ 50டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும். ஆனால், அவனுக்கு மனநல ஆலோசகராக தொடரும் திட்டம் இல்லை. அவனுக்கு ஒரு வீடியோ கேம் டெவலப்பர் ஆக வேண்டும் என்பது விருப்பம். அறிவியல் மற்றும் ஆங்கில வகுப்புகளில் சிறந்து விளங்குகிறான்.
அவன் சம்பாதிக்கும் பணத்தை பள்ளிக்கூடத்தில் ஸ்னாக்ஸ் வாங்க பணமில்லாத குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் வாங்க செலவிடுகிறான். இவ்வாறு சிரோவின் அம்மா கூறினார்.
இளம் ஆலோசகர், சிரோ ஞாயிற்றுக்கிழமைகளில் சுரங்கப்பாதைகளிலும், தெருவோரங்களிலும் ஆலோசனை வழங்கினாலும், எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்ளவும், தனது கனவுகளைத் தொடர எப்போதும் ஊக்குவித்த பெற்றோரிடமிருந்து தான் ஞானத்தைப் பெற்றதாக நினைக்கிறான்.
-செய்தி மூலம் : நியூயார்க்போஸ்ட்