பூமியை துளையிடும் சீனா, அதுவும் 32 ஆயிரத்து 808 அடி
பூமிக்கு அடியில் 32,808 அடி ஆழத்திற்கு சீனா துளையிட்டு வருகிறது. சத்தமின்றி நடக்கும் இந்த பணிகள் எதற்கு தெரியுமா?;
நாம் வாழும் இந்த பூமி பல ஆச்சரியங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் நிகழும் அதிசயம் குறித்த தகவல்களை நம்மை வியக்க வைப்பதாகவே இருக்கிறது.
இதனால் பூமி குறித்து பல்வேறு உலக நாடுகளும் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். அதன்படி இப்போது சீனா நடத்தும் புதிய ஆய்வு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சீனா இப்போது பூமிக்கு அடியே 32 ஆயிரம் அடி ஆழத்திற்குத் துளையிடும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது அண்டை நாடான சீனாவில் ஜனநாயக ஆட்சி இல்லை. இதனால் அங்கே ஆட்சியாளர்கள் நினைப்பது அனைத்துமே சத்தமில்லாமல் நடந்து விடும்.. அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். வானிலை, சாட்டிலைட், விமானங்கள் என்று பல்வேறு துறைகளிலும் சீனா படுவேகமாக ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
விண்வெளியில் தங்களுக்கு எனத் தனியாக விண்வெளி ஆய்வு மையத்தையே கூட அமைத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கிடையே அவர்கள் செய்து வரும் மற்றொரு ஆய்வு குறித்த தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது சீனா ஆய்வாளர்கள் பூமிக்கு அடியே இப்போது துளையிட்டு வருகிறார்கள்.
இதெல்லாம் பெரிய விஷயமா? இப்போது ஆழ்துளைக் கிணற்றுக்கே கூட பல நூறு அடி ஆழத்தில் துளையிடுகிறார்களே எனக் கேட்கலாம். ஆனால், அதுவும் இதுவும் ஒன்று இல்லை. ஏனென்றால் சீன ஆய்வாளர்கள் அவ்வளவு ஆழத்திற்குத் துளையிடுகிறார்கள்.
எவ்வளவு ஆழம்: சீன ஆய்வாளர்கள் பூமியில் சுமார் 10,000 மீட்டர் (அதாவது 32,808 அடி) ஆழத்திற்குத் துளையிடும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். சீனாவின் ஆழமான ஆழ்துளைக் கிணறாகக் கருதப்படும் இதன் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கே எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேறு எந்த தகவல்களும் சீனா தரப்பில் இருந்து வரவில்லை.
துளையிடும் பணிகள் குறித்த தகவல்கள் பெரியளவில் வெளியே கசியாமல் சீன அதிகாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். இதில் 10க்கும் மேற்பட்ட பாறை அடுக்குகளைத் தாண்டி இந்த துளை அமைக்கப்படுகிறது. பூமியின் கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும் வரை துளையிடுவார்கள் எனக் கூறப்படுகிறது..
அங்கே இருக்கும் பாறைகள் சுமார் 14.5 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இரண்டு மெல்லிய இரும்பு கேபிள்களில் ஓட்டும் பெரிய லாரிகளுக்கு இணையாக இந்த துளையிடும் பணி கடினமாக இருப்பதாகச் சீன பொறியியல் அகாடமியின் ஆய்வாளர் சன் ஜின்ஷெங் சின்ஹுவா தெரிவித்தார்.
என்ன காரணம்?: சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இதுபோன்ற ஆய்வுப் பணிகளில் இதுபோன்ற ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி ஆய்வாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜி ஜின்பிங், பூமியில் அதிக ஆழத்திற்கு ஆய்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்த ஆய்வுகள் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும் மற்றும் பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களைக் கண்டறியவும் உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
துளையின் அடிப்பகுதியில் 180 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை, துரப்பண பிட்டை தொடர்ந்து உடைப்பது மற்றும் மாற்றுவது மற்றும் ஆழத்தில் உள்ள பாறைகளின் வலிமை உள்ளிட்ட பல சவால்களை குழு அனுபவிக்கிறது.
பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை ரஷ்யக் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். அங்கே 12,000 மீட்டர், அதாவது 40,230 அடி ஆழத்தில் துளை அமைக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், துளையிடும் பணிகள் முழுமையாக நிறைவடைய 20 ஆண்டுகள் ஆனது.