சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழிப்பாதைக்கு வாங்க...!

சென்னை- ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் பல நாடுகள் பங்கேற்கலாம் என ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-10-26 06:49 GMT

பிரிக்ஸ் தலைவர்கள் 

சென்னை- ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் சர்வதேச கடல்வழி சரக்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண ஆர்டிக் கடல் சார்ந்த வடக்கு கடல் வழித் திட்டத்துக்கு ரஷ்யா முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் சென்னை, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரங்களை இணைக்கும் கடல் வழித்திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டு உள்ளன. புதிய கடல் வழி திட்டம் தொடர்பாக டெல்லியில் அண்மையில் இந்திய, ரஷ்ய உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்டிக் கடல் பகுதியில் பனிக்கட்டிகளை உடைத்து செல்லும் சரக்கு கப்பல்களை வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி ரஷ்ய அரசு நிறுவனமான ரோசோடோமுக்காக இந்தியாவில் 4 அதிநவீன கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6,000 கோடி ஆகும். மேலும் ஆர்டிக் கடல் பகுதியில் சரக்கு கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் ரஷ்யா உறுதி அளித்தது.

இந்த சூழலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது வடக்கு கடல் வழி திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் இணையலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News