போயிங் தொழிற்சாலையில் 17 ஆயிரம் பேர் பணி நீக்கம்..!
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் உள்ளது.;
போயிங் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். போயிங் தயாரிக்கும் விமானங்களை உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக, நிறுவனத்துக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. அடுத்த நான்கு ஆண்டுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கை.
இதை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாத நிலையில், 33 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், போயிங் பங்குகள் 1.7% சரிந்தன. நிறுவனத்துக்கு தினமும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நிதி இழப்பை சரி செய்ய, 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக போயிங் தொழிற்சாலை தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில், அவர் கூறியிருப்பதாவது:
தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, நிறுவனம் தனது 737 MAX, 767 மற்றும் 777 ஜெட் விமானங்களின் உற்பத்தியை ஒரு வருடம் தாமதப்படுத்துகிறது. வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. நிதி இழப்பை சரி செய்ய பணியாளர்களை குறைக்க வேண்டும். வரும் மாதங்களில், எங்கள் மொத்த பணியாளர்களின் அளவை தோராயமாக 10 சதவிகிதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த குறைப்புகளில் நிர்வாகிகள், மேலாளர்கள், தொழிலாளர்கள் அடங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து இருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.