எண்ணெய் விலை உயர்வை தடுக்க அரபி கடலில் போர்க்கோலம் பூண்டு நிற்கும் இந்தியா

நமது எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பதற்காக அரபிக்கடலில் இந்தியா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது.

Update: 2023-12-29 16:08 GMT

இந்திய போர்க்கப்பல் (கோப்பு படம்).

இந்தியா எந்த விலைகொடுத்தும் தன் பொருளாதாரத்தை அதாவது எரிபொருள் கட்டுபாட்டை நிலை நிறுத்த முடிவு செய்து விட்டது. இதனால் அரபிக்கடலில் போர்க்கோலம் பூண்டு நிற்கின்றது.

இந்தியா ஒரு போருக்குத் தயாராகின்றது. ஆனால் தனியே அல்ல, அரபுநாடுகள் சில, மற்றும் அமெரிக்காவோடு இணைந்து தயாராகின்றது. .

ஏமனிலிருந்து அட்டகாசம் செய்யும் ஹவுத்தி தரப்பு, முதலில் இஸ்ரேலியக் கப்பலைத் தாக்குவோம் என்றது. பின் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என்றது. இப்போது யுத்த பித்தம் தலைக்கேறிய நிலையில் கண்ணில்படும் கப்பல்களை எல்லாம் தாக்குகின்றது.

இந்த தாக்குதலால் செங்கடல் வழியாக வரும் கப்பல்கள், இன்னும் அந்த பிரதேசம் வழியாக வரும் கப்பல்களின் எண்ணெயெல்லாம் தடைபடும். இது விலை உயர்வை அதிகரிக்கும்.

இந்தியாவின் ரஷ்ய மலிவு விலை எண்ணெயும் பாதிக்கப்படும். அதாவது கொள்முதல் எண்ணெய் விலை உயராது, மாறாக எண்ணெய் கொண்டுவரும் விலை உயர்வதால், பெட்ரோல் விலை உயரும்.

இந்தியா இப்போதெல்லாம் பெட்ரோலை இறக்குமதி மட்டும் செய்வதில்லை. ரஷ்ய எண்ணெயினை மலிவு விலையில் வாங்கும் இந்தியா, அதை சுத்திகரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றது . இதனால் இருவழிக் கடல்பாதையில் இந்தியா அங்கு வியாபாரம் செய்கின்றது.

இந்த கடல்பாதைக்கு அச்சுறுத்தல் என்றால் இந்திய எண்ணெய் வியாபாரம் அடிவாங்கும். இது கொஞ்சம் தந்திரமான விவகாரம். அமெரிக்காவினைப் பொறுத்தவரை இந்திய உறவு வேண்டும். ஆனால் ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு வருவதில் விருப்பமில்லை. இதனால் இந்தியக் கப்பல் தாக்கப்படும் போது அமெரிக்கக் கப்பல் தடுக்கவில்லை.

அப்படியே, நாங்கள் மட்டும் தான் இந்த கடலில் காவல் இருக்க வேண்டுமா? மற்ற நாடுகளெல்லாம் செலவழிக்கக் கூடாதா எல்லோரும் வந்தால் தான் என்ன என்பது போல் அது மவுனித்தது. இந்தியாவும், யாரையும் நம்பி நாங்கள் இல்லை , எங்கள் கப்பலைக் காக்க நாங்கள் தயார் என, மூன்று போர்க் கப்பல்களை மேற்கே அனுப்பி விட்டது.

இப்போது இந்த விவகாரத்தால் தன் வணிகமும் பாதிக்கப்படும் என அஞ்சும் அரபு நாடுகள், இந்தியாவோடு கை கோர்க்கின்றது. இதில் முதல் நாடு சவூதி அரேபியா.

ஹவுத்தி செய்த ஒரு முக்கிய காரியம், சவூதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் கப்பலைத் தாக்கியது. இது சவூதியின் வியாபாரச் சிக்கல் என்பதால் சவூதி தவித்தது.

இஸ்ரேல் போர் நடக்கும் நேரம் அமெரிக்காவுடன் கைகுலுக்குவது எப்படி என யோசித்த சவூதிக்கு, இந்தியா கைகொடுத்து விட்டது. இப்போது இந்திய சவூதி கூட்டு ஒத்துழைப்பு தொடங்கியிருக்கின்றது. 2021ல் இருந்தே இந்தியாவும் சவூதியும் நெருங்கி வந்தன. பல பயிற்சிகளை ஒருங்கே செய்தன. சவூதிக்கு கடல் வழிப் பயிற்சிகளை இந்தியா வழங்கத் தொடங்கியது. இப்போது அது சரியாக கைகொடுக்கின்றது.

கவனியுங்கள் ...சவூதி எனும் இஸ்லாமிய நாட்டில் இருந்து, பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாட்டுக்குச் சென்ற கப்பலை, இஸ்லாமிய இயக்கமே தாக்கிய நிலையில், சவூதி எனும் இஸ்லாமிய நாடு, இந்தியாவுடனே நட்புக்கரம் நீட்டுகின்றது.

இவ்வளவுக்கும் பாகிஸ்தானின் பல காவல்கள் சவூதியில் உண்டு. சவூதிக்குள் பல காவல்களை பாகிஸ்தானின் ராணுவமே ஒப்பந்த அடிப்படையில் செய்கின்றது.

அந்நிலையில் இந்திய உறவை கடலில் தேடினார்கள் என்றால், அதுதான் இந்திய கடற்படையின் பலம். ஆக அரபிக் கடலில் அரபு நாடுகளின் ஆதரவில் களமிறங்குகின்றது இந்தியா. இந்திய வரலாற்றில் இது புதிது... இந்தியாவின் வேகத்தை கண்ட அமெரிக்கா தற்போது தானும் இந்திய கப்பல்களை பாதுகாக்க போவதாக கூறி களத்திற்கு வருகிறது. இந்தியா முன்பெல்லாம் தன் எல்லை தாண்டாது. மிஞ்சிப் போனால் சீன எல்லையில் அடிவாங்கும். குட்டி நாடான இலங்கையில் அடிவாங்கி விட்டு ஓடிவரும்.

அந்த அளவுதான் நாட்டின் பலத்தை சுருக்கி முடக்கி வைத்திருந்தனர். பிரதமர் மோடி காலத்தில் வரலாற்றிலேயே முதல் தடவையாக பாரதம் செங்கடல் வரை தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றது. மிகப்பெரிய வல்லரசு பலத்துடன் பெரும் சக்தி வாய்ந்த நாடாக அரபிக்கடலின் மேற்கு பகுதியில் போர்க்கோலம் பூண்டு நிற்கின்றது. பாரதம் உலகாளும் காட்சிக்குள் வந்து விட்டது. அதாவது வல்லரசுத் தன்மையினை தொட்டு விட்டது.

மேற்குக் கடலில் இந்திய ஆதிக்கம் என்பது நம்பமுடியாத சாதனை. அச்சாதனையினை பிரதமர் மோடி அரசு செய்திருகின்றது. பாரதம் உலக அரங்கில் பலமான தேசமாக தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய நேரமிது. முதன் முதலில் உலக அரங்கில் பலமாக கால் வைக்கின்றது இந்தியா...

பாரதி பாடிய "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என்ற கனவு நிஜமாகிக் கொண்டிருக்கின்றது.

Tags:    

Similar News