வாழ்வின் உச்ச கட்ட நெருக்கடியில் காசா வாழ் பொதுமக்கள்
இஸ்ரேல் தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கிய நிலையில், காசா வாழ்மக்கள் வாழ்வின் உச்சகட்ட நெருக்கடியில் உள்ளனர்;
இஸ்ரேல் தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கிய நிலையில், காசா வாழ்மக்கள் வாழ்வின் உச்சகட்ட நெருக்கடியில் உள்ளனர். காசாவில் பலியானோர் எண்ணிக்கை 2,808 ஐ தாண்டியும் அதிகரித்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 10,859 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 254 பேர் பலியான தாகவும், மொத்தமாக இறந்தவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் டாக்டர், நர்சுகள் என 37 சுகாதார பணியாளர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் நிமிடத்திற்கு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். மேலும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதால் தெற்கில் உள்ள கான் யூனிஸ் நகரம் ஸ்தம்பித்துள்ளது.
காசாவில் இருந்து வெளியேற எகிப்தை ஒட்டிய ரபா கிராசிங் பாயிண்ட் மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இவ்வழியாக அமெரிக்கர்கள் உள்ளிட்ட மக்களை வெளியேற்ற அமெரிக்கா, எகிப்து நாடுகள் முயற்சி மேற்கொண்டன. ஆனால் ரபா பகுதியில் நேற்றும் குண்டுகள் வீசப்பட்டன. இரவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் நேற்று ரபா எல்லை திறக்கப்பட்ட சில நிமிடத்தில் மீண்டும் மூடப்பட்டதால் அங்கிருந்து வெளியேற கூடியிருந்த ஏராளமான மக்கள் முடங்கி உள்ளனர். இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் படையினர் 199 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு மத்திய பாஜ அரசு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு எதிர்க்கட்சிகள் குழு நேற்று சென்றது. காங்கிரசின் மணிசங்கர் அய்யர், ஐக்கிய ஜனதா தளத்தின் கே.சி.தியாகி, பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி, சிபிஐ (எம்.எல்) பொதுச் செயலாளர் தீபன்கர் பட்டாச்சார்யா ஆகியோர் பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவை சந்தித்து இஸ்ரேலால் காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
உடனடியாக போரை நிறுத்தி, காசாவில் மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், 15 எதிர்க்கட்சி தலைவர்கள் கையொப்பமிட்ட அறிக்கையை அவர்கள் அளித்தனர்.இஸ்ரேல் ராணுவம் காசாவை முற்றிலும் முடக்கி உள்ளதால், உணவு, குடிநீர் இன்றி பாலஸ்தீன மக்கள் தவிக்கின்றனர். இன்னும் 24 மணி நேரத்தில் எரிபொருள் மொத்தமாக தீர்ந்துவிடும் என்பதால் மருத்துவமனையில் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் உடனடியாக காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இதற்கிடையே எகிப்து எல்லையில் பல நாடுகள் அனுப்பிய நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் பல கிமீ தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.