பரிதாபத்தின் உச்சத்தில் உலகின் வளமான நாடு: போரால் அகதிகளாக மாறும் மக்கள்

உலகின் வளமான நாடு உக்ரைன் தற்போது நடந்து வரும் போரினால் சிதைந்து வறுமையின் கோரத்தின் உச்சத்தில் உள்ளது.

Update: 2024-09-22 15:45 GMT

தேனி மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் பாஸ்கரன்.

ஒரு நாட்டின் வலுவான அரசியல் தலைமையின் முக்கியத்துவத்தை உக்ரைன் போர் எடுத்துக்காட்டுகிறது என தேனி மாவட்ட பாஜகவை சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

உக்ரைனில்  தற்போது கடுமையான போருக்குப் பிறகு அங்குள்ள 50 சதவீத பெண்கள் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களாக  மாறியிருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் வளமான நாடுகளில் ஒன்று உக்ரைன். உலகிற்கே கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் உட்பட உணவுப்பொருட்களையும், பல ஆயுதங்களையும் சப்ளை செய்து பணக்கார நாடாக விளங்கி வந்தது. மக்கள் மிகவும் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சதியால், உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் போரால், வளமான உக்ரைன் இன்று வறுமையின் உச்சத்தில் சிக்கித்  தவிக்கிறது. விவசாயம், தொழில் வீழ்ந்து விட்டது. உள்கட்டமைப்புகள் அழிந்து போனது.

மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே திணறி வருகின்றனர். பெரும்பாலானோர் உணவுக்கு வழியில்லாமல் ஒருவேளை உணவை உண்டு  வயிற்றைக் கழுவ வேண்டிய நிலை உருவாகி விட்டது. இதுவும்  சில நாட்களுக்கு மேல் ஓடாது. இன்னும் சில மாதங்கள் போர் நீடித்தால், மக்கள் அத்தனை பேரும் அகதிகளாக மாறி விடுவார்கள். உணவுக்கும், மருத்துவத்திற்கும் பெரும் போராட்டமாக உள்ளது. கிட்டத்தட்ட நாடே சுடுகாடாக மாறி விட்டது.

இவ்வளவுக்கும் காரணம் அமெரிக்காவின் சதி தான். இந்தியா இந்த போரை நிறுத்த பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஒரு நாடு பாதுகாப்பான தலைமையில் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, வரிசையில் உக்ரைனும் சேர்ந்துள்ளது.

இதனை மனதில் வைத்து தான் பிரதமர் மோடி, ‘இது போருக்கான காலம் இல்லை. வளர்ச்சிக்கான காலம்’ என பேசி வருகிறார். அமெரிக்காவில் இன்று அவர் வைத்துள்ள முழக்கம், ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம் என்பது தான். உலக மக்கள் அனைவருக்கும் சமமான நல்வாழ்வு அமைய வேண்டும் என பிரதமர் மோடி முழங்குவதன் காரணம், அமைதியான சூழலே, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். அமைதி வேண்டுமானாலும் வலுவான பாதுகாப்பு படையும், வலுவான அரசியல் தலைமையும் தேவை. இன்று இந்தியாவில் இந்த இரண்டும் அமைதியாக உள்ளதால், இந்திய நாடு செழிப்பாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News