கூகுளுக்குப் போட்டியாக ஆப்பிள் உருவாக்கும் 'தேடுபொறி தளம்'?
கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும் கூகுள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆப்பிளின் ஐபோன், மேக் உள்ளிட்ட சாதனங்களில் வழக்கமான தேடுபொறியாக கூகுள் இருந்து வந்துள்ளது. இதற்காக கூகுள் பெரும் தொகையுடன் ஆப்பிள் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக ஒரு தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாப்ட் மற்றும் டக்டக்கோ(DuckDuckGo) என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்பிள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து பிங்(bing) தேடுபொறியை வாங்க நினைத்தது. எனினும் இறுதியாக கூகுளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் கூகுளின் தொழில்நுட்பங்களை ஆப்பிள் கையப்படுத்த, கூகுளின் முன்னாள் ஊழியர் ஜான் ஜியானன்ட்ரியாவை ஆப்பிள் பணியமர்த்தியுள்ளது. இவர் ஐஓஎஸ் மற்றும் மேக்ஓஎஸ் தளத்தில் 'பெகாசஸ்' என பெயரிடப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் தேடுபொறியை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.