கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களை புதைக்ககூடாது, எரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு கட்டாயப்படுத்தியது. இதையடுத்து, ஐ.நா மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தொடர் அழுத்ததால் அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிரான அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது
புர்கா உட்பட முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.சுகாதார வழிமுறைகள் தவிர்ந்த முகத்தை முழுமையாக மூடுவதனை தடை செய்வதற்கான அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மதரஸாக்கள் மூடப்படும். இது தேசிய கல்விக்கொள்கையை மீறுவதாக இருக்கிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார் முகத்தை முழுமையாக மூடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம் என்றும் இதன்விளைவாக பயங்கரவாத நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம் என்பதுடன், ஈஸ்டர் தாக்குதலின் போது நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற காரணங்களுக்காகவே முகத்தை முழுமையாக மூடுவதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.