உலக புத்தக தினம்: வரலாற்று சிறப்பு மிக்க ஏப்ரல்-23
ஏப்ரல் 23 இன்றைய நாளை "உலக புத்தக தினமாக" படிக்க தெரிந்த அனைவரும் கொண்டாடுகின்றனர்.;
உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் ஏப்ரல் 23 இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர், இன்றைய நாளை உலக புத்தக தினமாக கொண்டாட நெகிழ்ச்சியான வரலாற்று காரணம் உண்டு.
"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை." என்றார் ஹென்றி வார்ட் பீச்சர், புத்தகங்கள் வீட்டை மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும், வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையையும் அழகாக்கும். புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், இந்த உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக இன்று ஒரு புத்தகமாவது வாங்குங்கள். அதை படிக்க ஆரம்பியுங்கள்.
உலக புத்தக தினம்
அறிவுசார் சொத்துகளான புத்தகங்களை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஆண்டு தோறும் உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களை நினைவு படுத்தும் ஏப்ரல் 23
உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமாக, உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்ததும் ஏப்ரல் 23, அதைப்போல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23. அது போலவே, ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது.
1616, ஏப்ரல் 23ம் நாள் உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ (William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர்.
மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர்களும் இந்த உலகத்தில் பிறந்தது ஏப்ரல் 23 தான்.
ஆக உலகின் பல பகுதிகளில் ஏப்ரல் 23 இல் புகழ்பெற்ற இலக்கிய வாதிகளின், பிறப்பும், மறைவும் வந்துள்ளது. அதிலும் மிகவும் பிரபலமான வில்லியம் ஷேக்ஸ்பியர், சிறந்த சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் இவருடைய பிறப்பும் , இறப்பும் ஏப்ரல் 23 தான். என்ன ஒற்றுமை என வியக்க வைக்கிறதா ? அதனால் தான் இவர்களை மரியாதை செய்யும் வகையில், ஏப்ரல் 23ஐ ஒரு வரலாற்று சிறப்பு மிக்க குறியீடாக கொண்டு உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாச்சார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
வாழ்க்கைப் போராட்டத்தில் வென்ற இலக்கியவாதிகள்..!
வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக்காலத்தைப் புரட்டிப் பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது. கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும், ஓட ஓட விரட்டி இருக்கின்றன. "கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது" என துண்டுப் பிரசுரம் கொடுத்ததிற்காக, மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு இந்த வெளி உலகைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு திறந்திருந்தன. இந்த நிலையிலும்,கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன். எனவே, சிறைக் கம்பிகளுக்கிடையேயும், மற்றவர் வாசிக்கக் கேட்டு, மேதையானார். உலகப் புகழ் பெற்ற கவிதையான "பாரடைஸ் லாஸ்ட்" (Paradise lost) என்ற அழியா நூலை உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று போற்றப்பட்ட "லத்தீனை" எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில் நுழைப்பதற்காகவே பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பை நேசித்து மனம் ஈடுபட்டு, தூக்கத்தைத் துறந்தவர்..!
'புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது.
முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்ட போது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம் . நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்குகாக புத்தகம் அச்சிட்டு, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..
மாணவர்கள் மன நலம்
மாணவர்களிடம் காணப்படும் மன இறுக்கத்துக்குக் காரணம் புத்தகம் வாசிப்பு இல்லாததுதான். 90 சதவிகித மாணவ, மாணவிகள் கல்விப் பாட புத்தகங்களைத் தவிர, மற்ற புத்தகங்களைப் படிப்பதில்லை என்பது வேதனையான உண்மை. மாணவர்களுக்கு சிந்தனை வளமும், தன்னம்பிக்கையும், தைரியத்தையும் கொடுப்பது நூல்களே. அறிஞர்களின் பல ஆண்டு வாழ்வியல் அனுபவங்களை நமக்கு சில நாட்களில் தருவது புத்தக வாசிப்பு. அதனால் கல்விப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களைப் படிக்கும்போது அவர்களுடைய மனம் மகிழ்ச்சியடைகிறது. ஒரு நல்ல தெளிவான சிந்தனை கிடைக்கிறது. அடுத்த தலைமுறை சிறந்த தலைமுறையாக உருவாகும். ஆகவே, புத்தக வாசிப்பு என்பது எல்லோருக்கும் இன்றியமையானது
புரட்சியாளர் பகத்சிங்கோ, தான் சாகும்வரை படித்துக்கொண்டிருந்தார். "சாகப்போகிறோம் என்றாகிவிட்டது... இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு" என்று அவரிடம் கேட்டதற்கு, "சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையாவது கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்"என்று புன்னகைத்தவாறே பதிலளித்தார் பகத்சிங்.
தான் தேடிய புத்தகம் பல மைல் தொலைவில் இருப்பதை அறிந்து, அங்குசென்று அதை வாங்கிப் படித்தவர் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அதேபோல கார்ல் மார்க்ஸ், புத்தக அறைகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால்தான், அவரால் உலகுக்கு 'மூலதன'த்தைக் கொடுக்க முடிந்தது. நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி என்று பெயர்பெற்ற ஏ.பி.ஜே.அப்துல் கலாமும் மிகப்பெரும் புத்தக வாசிப்பாளராகவே மறையும்வரை இருந்தார். இப்படிப் பலரும் புத்தகங்களுக்குள் ஆழ்ந்திருந்ததால்தான், அவர்கள் அனைவரும் உலகம் வியக்குமளவுக்கு அறிஞர்கள் ஆக முடிந்தது.
"ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்" என்றார் பேரறிஞர் அண்ணா. அந்தவகையில், மற்ற நாள்களில் புத்தகங்கள் வாசிப்பை மறந்தாலும்கூட, உலக புத்தக தினத்தன்று மட்டுமாவது, சிறந்த புத்தகங்களை வாங்கி, நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசளிப்பதோடு, நாமும் நல்ல பல புத்தகங்களை வாசிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.
குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பிறந்தநாள் உட்பட விழாகாலங்களில் உங்களுக்கு பிடித்த நல்ல புத்தகங்களை பரிசளியுங்கள்...!
"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!"