கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் பீகாரில் நிலவும் வெப்ப அலை நிலைமைகள் காரணமாக அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது
கடுமையான வெப்ப அலைகளின் கீழ் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து பாதிப்படைந்து கொண்டிருப்பதால், கடுமையான வெப்பத்திலிருந்து இந்தியாவுக்கு நிவாரணம் இல்லை.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய அறிவிப்பில் உத்தரப் பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், விதர்பா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற பல்வேறு பகுதிகளில் கடுமையான மற்றும் மிகக் கடுமையான வெப்ப அலை நிலைகளை கணித்துள்ளது .
பீகாரில் நிலவும் வெப்ப அலை நிலைமைகள் காரணமாக, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தினசரி வெப்ப அலை வழிகாட்டுதலின்படி, மாநிலம் சிவப்பு எச்சரிக்கை எச்சரிக்கையில் உள்ளது. கடும் வெயிலை அடுத்து, 12ம் வகுப்பு வரையிலான கோடை விடுமுறையை பாட்னா மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது. ஜூன் 24ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பத்தின் எதிரொலியாக பீகாருடன், பல மாநிலங்களும் கோடை விடுமுறையை நீட்டித்துள்ளன. ஜார்க்கண்டின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மாநிலத்தில் ஜூன் 17 வரை 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தது.
மறுபுறம், கோவா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளும் கோடை விடுமுறையை நீட்டித்துள்ளன.
அடுத்த நான்கு நாட்களில் ஒடிசா, விதர்பாவின் சில பகுதிகளில் வெப்பம் மற்றும் கடுமையான வெப்ப நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்திலும், ஜார்கண்டிலும் வசிக்கும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பத்தைக் காண்பார்கள். கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகியவை அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலைகளின் சீற்றத்தை அனுபவிக்கும். தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் ராயலசீமா போன்ற மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்ப அலை தொடரும்.
தகிக்கும் பகல்களுடன், ஜூன் 17 அன்று விதர்பா மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்பமான இரவு நிலைமைகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஜூன் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இதே போன்ற நிலைமைகள் நிலவும்.
அடுத்த மூன்று நாட்களில் மத்திய, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இருப்பினும், அதன் பிறகு 2-4 டிகிரி செல்சியஸ் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அடுத்த மூன்று நாட்களில் வடமேற்கு இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருக்காது. இருப்பினும், ஐஎம்டி அறிவிப்பின்படி, அடுத்த நாட்களில் படிப்படியாக 2-4 டிகிரி செல்சியஸ் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.