10 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கப்போகுதாம்..! வானிலை மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பகல்நேர வெப்பம் கடுமையாக இருக்கிறது. அதே நேரத்தில் இரவு வேளைகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதேபோல், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிக கவனமாக கையாளவும் வலியுறுத்தி உள்ளார். மழை வெள்ளத்துக்கு ஒரு உயிர் கூட பலியாகிவிடக்கூடாது என்று அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.