ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உதகமண்டலத்தில் புதிய உச்சத்தில் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில், ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை உதக மண்டலம் தொட்டு உள்ளது. கடந்த 1951ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை இன்றைய தினம் உதக மண்டலத்தில் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக, நேற்று உதக மண்டலத்தில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கோட்டயத்தில் வரலாற்றில் இல்லாத அளவாக புதிய உச்சத்தைத் தொட்ட வெப்பநிலை: நேற்று கேரள மாநிலம் கோட்டயத்தில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் 101.30 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி மக்களை வாட்டி வதைத்து உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கோட்டயத்தில் அதிகபட்ச வெப்பநிலை 100.94 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்த நிலையில், நேற்றைய வெப்பநிலை அதனை முறியடித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான 100.40 டிகிரி பாரன்ஹீட் என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு கடந்த 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 100.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் வெப்பமானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஈரோட்டில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் - 101.48 டிகிரி பாரன்ஹீட்
கோயம்புத்தூர் - 102.56 டிகிரி பாரன்ஹீட்
தருமபுரி - 106.16 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி - 104.36 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் - 103.28 டிகிரி பாரன்ஹீட்
நாமக்கல் - 102.2 டிகிரி பாரன்ஹீட்
சேலம் - 104.18 டிகிரி பாரன்ஹீட்
தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட்
திருப்பத்தூர் - 106.52 டிகிரி பாரன்ஹீட்
திருச்சிராப்பள்ளி -102.28 டிகிரி பாரன்ஹீட்
திருத்தணி - 105.08 டிகிரி பாரன்ஹீட்
வேலூர் - 105.98 டிகிரி பாரன்ஹீட்
என தமிழ்நாட்டில் வெப்பமானது பதிவாகியுள்ளது.