குழியால் குலைந்த சாலை - பொதுமக்கள் கோரிக்கை

கோம்பைக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை தற்போது கடும் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதி;

Update: 2025-05-22 04:40 GMT

குழியால் குலைந்த சாலை - பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர யூனியனுக்குட்பட்ட கொமராபாளையம் பஞ்சாயத்திலுள்ள கோம்பைக்காடு மற்றும் அண்ணாமலைப்பட்டி போன்ற மலைகிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளுக்கு நேராக செல்லும் முக்கிய சாலை, ராசிபுரம் – ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையிலிருந்து தச்சங்காடு வழியாக கோம்பைக்காடு வரை சென்றடையும் தார்சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினசரி பல வாகனங்கள் மற்றும் பள்ளிக்குச் செல்வோர் பயணம் செய்கிறார்கள்.

கோம்பைக்காடு மற்றும் அண்ணாமலைப்பட்டி பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்கள் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, இந்த சாலையை தவிர வேறு வழி இல்லாத நிலையில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது கடும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையின் ஜல்லி முறிந்து, ஆழமான குழிகள் உருவாகி, வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் பெரும் அவதியளிக்கின்றது.

தற்போது கோடை விடுமுறை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில் போக்குவரத்து சற்று குறைந்துள்ளது. இது சாலையை சீரமைக்க ஏற்ற நேரமாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விடுமுறை முடிவதற்குள் சாலையை சீரமைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News