ஒரே நாளில் மூன்று தேரிழுக்கும் திருவிழா
நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களில் இன்று பவுர்ணமி தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது;
பங்குனி மாதத்தை ஒட்டி நாமக்கலில் நடைபெறும் பவுர்ணமி தேர்த்திருவிழா
நாமக்கலில் நடைபெறும் பவுர்ணமி தேர்த்திருவிழா பக்தர்களுக்கு ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, இன்று நாமக்கல் நரசிம்மர் கோவிலில், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. ஒரே கல்லில் உருவான நாமக்கல் மலையின் மேற்கு பகுதியில், நாமகிரி தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் சன்னதி மலையை குடைந்து குடைவறை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலையின் கிழக்குப் பகுதியில் அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் சந்நிதி, கார்க்கோடக பாம்பின் மீது அனந்த சயன நிலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலும் குடைவறை கோவிலாக சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. சாந்த சொரூபத்தில் திகழும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பொழிகிறார்.
இந்த வருடத் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏற்கனவே மார்ச் 4ஆம் தேதி நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குளக்கரை மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8:30 மணிக்கு, நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மர் தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர், மாலை 4:30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் சிறப்பாக முன்னெடுத்துள்ளனர். இந்த ஆன்மிக நிகழ்வுகள், நாமக்கல் பகுதி முழுவதும் பக்தி மகிமையால் நிறைந்துவிட, ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.