20 நாட்களாக தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்
எலந்தகுட்டையில், 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் இல்லாத நிலையில், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்;
20 நாட்களாக தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட எலந்தகுட்டை பஞ்சாயத்திலுள்ள காட்டுப்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு நிலத்தடி நீர் மூலமாக, பஞ்சாயத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் குடிநீர் வழங்கும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து, பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும், இன்னமும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்மோட்டார் சரி செய்யாமல் பஞ்சாயத்து அலட்சியம் காட்டி வருகின்றது. இதனால், தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் இல்லாத நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே தண்ணீருக்காக திரிகின்றனர். மக்கள் நீர் வேட்டை செல்லும் இந்த அவல நிலைக்கு முடிவுகாண நடவடிக்கை எப்போது? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.