தடை பொருள் விற்பனை – அதிகாரிகள் அபராதம்
ராசிபுரத்தில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது;
தடை பொருள் விற்பனை – அதிகாரிகள் அபராதம்
ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஆத்தூர் சாலை மற்றும் தட்டான்குட்டை சாலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அச்சமின்றி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரையடுத்து, நகராட்சி சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சுகாதார அலுவலர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் குழு குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, தட்டான்குட்டை சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் போது, அந்தக் கடையிலிருந்து 400 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக விற்பனை செய்த காரணத்திற்காக கடைக்காரர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் நகராட்சியின் ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் நலனை கருதி அரசு விதித்த தடைச்சட்டங்களை மீறி செயல்படுவோர் மீது, இதுபோல் கடுமையான நடவடிக்கைகள் தொடரப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த திடீர் சோதனை பகுதி மக்களிடையே வியப்பையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.