வையப்பமலை சுப்ரமணிய சுவாமி தேர் திருவிழா

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் அரோகரா கோஷங்களுடன் மலையைச் சுற்றி பக்தர்களால் இழுத்து வரப்பட்டது;

Update: 2025-04-12 04:40 GMT

சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்

மல்லசமுத்திரம் அருகே உள்ள வையப்பமலை மலைக்குன்றின் உச்சியில் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர் திருத்தேர் வையப்பமலை சுப்பிரமணிய பக்தர்களால் அரோகரா கோஷங்களுடன் மலையைச் சுற்றி இழுத்து செல்லப்பட்டது.

பின்னர், மாலை 4:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தேரும் மலையைச் சுற்றி பக்தர்களால் வெகு விமர்சையாக இழுத்து வரப்பட்டது. மாலை 6:45 மணிக்கு தேர்திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று இரவு 8:00 மணிக்கு சத்தாபரண மகாமேரு என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

விழாவின் இறுதிநாளாக நாளை காலை 6:00 மணி முதல் மாலை வரை மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு, மண்டல அறக்கட்டளைகள் சார்பாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News