சிப்காட் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம்
நாமக்கலில், சிப்காட் தொழிற்துறை அமைப்பதற்கு எதிராக, பொதுமக்கள் ஒரு ஆண்டிற்கும் மேலாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்;
சிப்காட் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம்
நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்துறை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வளையப்பட்டி, அரூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிப்காட் திட்டத்துக்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் இன்று காலை பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகரை நேரில் சந்தித்து, அந்தப் பகுதியில் சிப்காட் திட்டம் அமைக்கப்படக்கூடாது என வலியுறுத்தி, தங்களது கோரிக்கையை நேரில் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் மாசுபடக் கூடாது, குடிநீர் மற்றும் உயிர்வாழ்வுக்கு இழப்பு ஏற்படக்கூடாது எனும் நோக்கத்துடன், சிப்காட் திட்டத்தை நிறுத்த அரசின் நேரடி நடவடிக்கை தேவை என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினரிடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நாங்கள் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள்; தொழிற்துறை வந்தால் நிலமும் நீரும் மாசுபட்டு, வாழ்வாதாரம் வீழ்ச்சியடையும். அதனை அனுமதிக்க முடியாது" என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராடியும் அதிகாரப்பூர்வ பதில் இல்லை என்பதாலேயே அவர்கள் நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளனர்.