விழா சூழலில் மஞ்சளுக்கு இடமில்லை – தேர் திருவிழாவால் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டையில், சித்திரை தேர் திருவிழா என்பதால் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது;

Update: 2025-05-03 10:50 GMT

விழா சூழலில் மஞ்சளுக்கு இடமில்லை – தேர் திருவிழாவால் ஏலம் ரத்து

நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் விற்பனையின் முக்கியக் கட்டமாக விளங்கும் நாமகிரிப்பேட்டை, தமிழகத்தையேத் தாண்டி இந்திய அளவிலும் பிரபலமான மஞ்சள் சந்தையாகப் பரிணமித்துள்ளது. இங்கு ஆர்.சி.எம்.எஸ். கூட்டுறவு மண்டி மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் வழியாக வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மஞ்சள் சீசன் தொடங்கியதால், வாரா வாரம் வரத்து அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஒரு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அதாவது, நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா காரணமாக, வரும் மே 6ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற விருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தீமிதி விழா மற்றும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சிகள் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள், கூட்டம் மற்றும் பாதுகாப்பு பணிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏலம் நடந்தாலும் அதன் பின் நடைபெறும் மூட்டை பிடித்தல், விவசாயிகளுக்கான பணப் பரிவர்த்தனை போன்ற பணிகள், விழா நாளில் கடுமையாக பாதிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மஞ்சள் ஏலம் வரும் மே 13ஆம் தேதி வழக்கம் போல் நடைபெறும் என்றும், விவசாயிகளும் வியாபாரிகளும் இந்த மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News