பள்ளி பஸ் பரிசோதனை: ராசிபுரத்தில் 23 வாகனங்கள் ஓட்டம் நிறுத்தம்
ராசிபுரத்தில் அனைத்து பள்ளி பஸ்களும் தனியார் பள்ளி மைதானத்தில் சோதிக்கப்பட்டன, அதில் 23 வாகனங்கள் மட்டும் தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது;
பள்ளி பஸ் பரிசோதனை: ராசிபுரத்தில் 23 வாகனங்கள் ஓட்டம் நிறுத்தம்
ராசிபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி பஸ்களும் தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த சிறப்பு ஆய்வில் சோதிக்கப்பட்டன. இந்த ஆய்வின் போது, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஒவ்வொரு வாகனத்திலும் இருக்கை வசதி, காப்பீடு செல்லுபடியாக இருக்கிறதா, தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் உள்ளதா, வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் செயல்பாட்டில் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர நுழைவும் வெளியேறும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள், தள அமைப்புகள், குழந்தைகளுக்கான அமர்விடம், புத்தகப்பைகள் வைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் சோதிக்கப்பட்டன.
மொத்தம் 250 பள்ளி பஸ்களில், 23 வாகனங்கள் மட்டும் பொதுசாலையில் இயக்கத்திற்குத் தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதால், அவை தற்காலிகமாக இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டன. குறைகள் அனைத்தையும் மே மாத இறுதிக்குள் சரிசெய்து, மீண்டும் ஆய்வுக்காக சமர்ப்பித்து தகுதி சான்று பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த நிகழ்வின் போது பள்ளி வாகன ஓட்டுனர்களுக்காக கண் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை மற்றும் ஆய்வில், நாமக்கல் வடக்கு ஆர்.டி.ஓ. முருகேசன், ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார், தாசில்தார் சசிகுமார், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று கண்காணித்தனர்.