பழிக்குப்பழியாக பிரபல ரவுடி கொலை: போலீஸ் ஏட்டு அவரது கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது - எஸ்பி அதிரடி

பழிக்குப்பழியாக பிரபல ரவுடி கொலை செய்யப்பட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு, அவரது கூட்டாளி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-05-25 17:25 GMT

 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மற்றும்  அவரது கூட்டாளி

பழிக்குப்பழியாக பிரபல ரவுடி கொலை, கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு, அவரது கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டுப்பகுதியில் கடந்த 9ம் தேதி இரவு கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உடனடியாக தனிப்படைகள் அமைத்து கொலை செய்தவர்களை தேடிவந்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்தையும் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட லூர்து ஜெயசீலன் கடந்த 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த அழகு என்பவரைக் கொலை செய்துள்ளார். இது சம்மந்தமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கொலை செய்யப்பட்ட அழகு என்பவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பொன்மாரியப்பன் (39) என்பவரின் தாய் மாமா ஆவார். ஆகவே தனது மாமா அழகுவை கொலை செய்த லூர்து ஜெயசீலனை 23 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழியாக கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மேற்படி தலைமைக் காவலர் பொன்மாரியப்பன், தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமபாண்டியன் மகன் மோகன்ராஜ் (39) என்பவருடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் இவ்வழக்கில் 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இக் கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஈடுபட்டிருந்தாலும், கொலை செய்தவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இருவர் மீதும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மற்றும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.


அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேல்முருகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்திராஜ், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.

Tags:    

Similar News