யூடியூபர் ரவுடி பேபி சூர்யா, சிக்கா கைது

மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

Update: 2022-01-04 15:15 GMT
ரவுடி பேபி சூர்யா.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திலகா. இவர் யூடியூபில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்கா ஆபிசியல் என்ற யூடியூப் சேனல்களில் திலகாவை பற்றி மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.


இதையடுத்து பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மதுரையில் தங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா (35), அவரது நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்கிற சிக்கா (48) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் கொரோனா பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் பதிவு செய்து வருகின்றனர். சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்களின் யூடியூப் சேனலை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சமூகநலன்களையும், இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News