போக்சோ வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞருக்கு 22 வருட சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காஞ்சிபுரம் இளைஞருக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாள்தோறும்பெ ண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அளிப்பது என்பது உறவினர்களில் ஆரம்பத்து, பொதுமக்கள் வரை குறைந்து வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றத்தின் செயலை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜிபூர் ரகுமான் (24) என்பவர் கடந்த 14.10.2014 அன்று 9 வயது சிறுமியை பாலியல் வன் புணர்ச்சி செய்தது சம்பந்தமாக அப்போதைய சிவகாஞ்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து அது தொடர்பான குற்றப் பத்திரிக்கையை முறையாக தாக்கல் செய்தார்.
பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டு, 8 வருடமாக வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சாலட்சுமி , நீதிமன்ற காவலர் லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் புவனேஷ்வரி ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தி இளம் வளர் பருவ பெண்களுக்கான நிலைகளினையும், அவர்களுக்கு எதிராக செயல்படும் குற்றவாளியின் செயலையும் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணை அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று மேற்படி வழக்கின் எதிரி முஜிபூர் ரகுமானுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்.
இத் தீர்ப்பில் 22 வருடம் ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ. 15,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்று தீர்ப்புகளை அதிரடியாக வழங்கி இருப்பது இதுபோன்று செயல்படும் நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
மேலும் பள்ளி , கல்லூரி அளவில் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு செய்து வரும் காலங்களில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் எனும் உறுதியையும் ஏற்கவேண்டும் எனற் கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.