இளம் வாக்காளர்கள், ஏன் வாக்களிக்க வேண்டும்?
உள்ளாட்சி தேர்தலில், இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், வாக்களிப்பதன் மூலமே சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்.
உள்ளாட்சி தேர்தலில், இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், வாக்களிப்பதன் மூலமே, சமுதாயத்தின் மாற்றத்தை உருவாக்க முடியும்.
'விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, இன்றும், நாளையும், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும், 27, 28 தேதிகளிலும் முகாம் நடத்தப்பட உள்ளது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, ஒவ்வொரு வீடு, தெருக்களில் இருந்தும் துவங்க வேண்டும். குடியிருக்கும் பகுதியில் உரிய கட்டமைப்புகள், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாலே, பிற அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் என்பது, முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு வார்டு வாரியாக, அரசியல் கட்சியினர் பெறும் வெற்றியை பொறுத்தே, அக்கட்சியின் வளர்ச்சி, எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான், அரசியல் கட்சியினர் வார்டு தோறும், தங்களுக்கான ஓட்டுவங்கியை உருவாக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், இளம் மற்றும் புதிய வாக்காளர்களின் பங்களிப்பு உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தந்த வார்டுகளில் உள்ள பிரச்னையை, இளம் வாக்காளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தங்கள் வீட்டின் முன் கழிவுநீர் வழிந்தோடுகிறது என்றால், அதை கண்டுக் கொள்ளாமலோ, கண்டும் காணாமலோ செல்லக் கூடாது; மாறாக, அந்த கழிவுநீர் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது,? அதற்கான தீர்வு என்ன என்பதை ஆராய வேண்டும்.
இந்த பிரச்னையை தங்கள் வார்டில் இருந்து தேர்வாகும் வேட்பாளரால் செய்து கொடுக்க முடியுமா என்பதை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு, திறமை வாய்ந்த வேட்பாளராக இருந்தால், அவரை ஆதரிக்க வேண்டும்; தம் குடும்பத்தாரின் ஓட்டுகளையும் அவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அரசியல், ஜாதி, மதம் கடந்த, 'நல்ல வேட்பாளர்' என்ற அடையாளத்துடன் கூடிய இந்த விசாலமான பார்வை தான், வளமான, வலிமையான உள்ளாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த உதவும். எனவே, இளம் வாக்காளர்கள், தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும். தேர்தலில், கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். அதன்மூலம், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.