தோளில் சுமந்து இளைஞரை காப்பாற்றிய பெண் ஆய்வாளர்: குவியும் பாராட்டு

சென்னையில், உயிரிழந்ததாக கருதப்பட்ட வாலிபரை, தோளில் சுமந்து ஓடி காப்பாற்றிய பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Update: 2021-11-11 09:30 GMT

மயக்க நிலையில் இருந்த வாலிபரை, தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

கனமழையால் சென்னை நகரம் தத்தளிக்கிறது. இந்த சூழலில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர், கனமழையில் சிக்கிக் கொண்டதால், கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்தது, ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை கவனித்த அப்பகுதி மக்கள், அவர் இறந்து கிடப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, உதயாவின் உடலில் அசைவு இருந்ததை கவனித்துள்ளார். உடனடியாக கொஞ்சமும் தயங்காமல், யாரையும் எதிர்பார்க்காமல், மயங்கிக் கிடந்த வாலிபர் உதயாவை, தனது தோளில் தூக்கிக் கொண்டு, ஆட்டோவை நோக்கி ஓடினார். பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அவரை சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

அங்கு உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வாலிபர் உதயாவை, பெண்  காவல் ஆய்வாளர் தனது தோளில் சுமந்து சென்ற புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது இந்த செயலுக்கு அப்பகுதியினர் மட்டுமின்றி நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலை பாராட்டி உள்ளார்.

Tags:    

Similar News