இது தான் தமிழக அரசியல் புரிந்து கொள்வார்களா? அப்பாவி பொதுமக்கள்
இது தான் தமிழக அரசியல் புரிந்து கொள்வார்களா? அப்பாவி பொதுமக்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.;
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலில் வெளியே தெரியாமல் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் கால் பதிக்க விடமாட்டோம், நுழையவே விட மாட்டோம் என்று திராவிட கட்சிகள் குறிப்பாக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சூளுரைத்து வந்த நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன.
ஆம் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஐந்து இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சி நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி அடைந்து உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அது தமிழகத்திற்குள் நன்றாக கால் ஊன்றிவிட்டது என்றே கூற வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. தி.மு.க. ஆகிய இரு பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியை தங்கள் சுய லாபத்துக்காக தேவைப்படும் நேரங்களில் வசை பாடி வந்தாலும் தற்போதைய சூழலில் பாரதிய ஜனதாவை கண்டு அச்சப்படுகின்றன என்றே கூற வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் எடப்பாடி பழனிசாமி அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார். அப்போது ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் எதிராக உச்சகட்ட எதிர்ப்பு நிலையில் இருந்தனர். 'கோ பேக் மோடி' என பலூன்களை பறக்க விட்டனர் .சமூக வலைத்தளங்களில் மோடி எதிர்ப்பு வாசகங்களை ஹேஸ்டேக்காக பரவ விட்டனர் .அது மட்டும் அல்ல கருப்பு கொடி போராட்டமும் நடத்தினார்கள். மோடி ஒரு விழாவில் பங்கேற்று விட்டு இன்னொரு விழாவிற்கு தரை மார்க்கமாக செல்ல முடியாமல் ஹெலிகாப்டரில் பறந்ததாகவும் கூறினார்கள். இதுவே தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் பறைசாற்றி கொண்டார்கள்.
ஆனால் இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அன்று மத்திய அரசையும் பாரதிய ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த மு. க. ஸ்டாலின் இன்று தமிழக முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆதலால் அரசியல் ரீதியாக அவர் மோடியை எதிர்க்க முடியவில்லை. அதே நேரத்தில் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்காமல் இருக்க முடியவில்லை. அன்று எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இன்று ஒரே மேடையில் அருகருகில் அமர்ந்து பேசக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்று எடப்பாடி பழனிசாமி எப்படி மோடியுடன் சிரித்து பேசி குனிந்து நெளிந்து செயல்பட்டாரோ அதே காட்சிகள் தான் இன்றும் ஸ்டாலின் ரூபத்தில் காண முடிகிறது. அன்று மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆட்களும் இன்று வெளியே நிற்கிறார்கள். ஸ்டாலின் உள்ளே வந்து விட்டார். இதனால் அரசியல் ரீதியான எதிர்ப்பும் காணாமல் போய்விட்டது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள் .அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. மட்டுமல்ல அவர்களது கூட்டணி கட்சிகளும் இன்று தங்களது எதிர்ப்பு உணர்வை மாற்றிக் கொண்டார்கள். ஆக தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதாவிற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாடு மாறிப் போய்விட்டது ஆளுங்கட்சியாக இருப்பதால் மோடியை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். அதன் காரணமாக தி.மு.க. கூட்டணி கட்சிகளும் எந்த காரணத்திற்காக முன்பு மோடியை எதிர்த்தார்களோ அந்த காரணத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மௌனியாகி விட்டார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். தத்துவப்படி அவர்கள் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக தான் உள்ளது. ஆக தமிழக அரசியலில் கால் ஊன்றிய பி.ஜே.பி. இப்போது நன்றாக வளரவும் தொடங்கிவிட்டது என்பதே உண்மை என கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பி.ஜே.பி. எதிர்ப்புக்கான காரணங்கள் எல்லாம் இன்னும் தமிழ்நாட்டில் அப்படியே தான் உள்ளன. ஆனால் அரசியல் காரணமாக அவற்றை மூட்டை கட்டி ஒதுக்கி விட்டார்கள் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இதுதான் தமிழக அரசியல். தமிழக வாக்காள பொதுமக்கள் இதனை புரிந்து கொண்டு தேர்தல் நேரத்தில் யார் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை செய்வார்கள்? செய்ய முடியும் ?என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.