தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமா?

தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை அமல்படுத்த மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-02-23 11:40 GMT

வழக்கறிஞர் மாரியப்பன்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா (AB-PMJAY) என்பது இந்திய அரசாங்கத்தால் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும். இது தமிழில்  "பிரதமர் மோடியின் மக்கள் ஆரோக்கியத் திட்டம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஏழ்மையான குடும்பங்களுக்கு இலவச மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதாகும்.


பயன்கள்:

மருத்துவக் காப்பீடு: AB-PMJAY திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில் நோய் கண்டறிதல், சிகிச்சை, மருந்துகள், மருத்துவமனைச் செலவுகள் போன்றவை அடங்கும்.

ரொக்கமில்லா சிகிச்சை: இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை பெறலாம்.

பல்வேறு சிகிச்சைகள்: இத்திட்டம் 1,393 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதில் இதய நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற முக்கிய நோய்களும் அடங்கும்.


விரிவான நெட்வொர்க்: AB-PMJAY திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 23,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

தொடக்கம்:

AB-PMJAY திட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி பெறும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும்.

பயனாளிகள்:

2023 டிசம்பர் வரை, இந்தியாவில் 10.74 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் AB-PMJAY திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளன. இது 40 கோடிக்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்கியது.

தகுதி:

AB-PMJAY திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒரு குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி பெற, பயனாளிகள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற  குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் மாரியப்பன் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது:-

நான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். நமது பாரத பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டின் குடிமக்கள் அனைவரும் தரமான மருத்துவ சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் பெறுவதற்கு வசதியாக ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ  காப்பீடு அளித்துள்ளார்.


நமது நாட்டின் பிற மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் செம்மையாக செயல்படுத்தப்பட்டு மக்கள் நன்கு பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் பல பொருத்தமற்ற காரணங்களை கூறி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு மறுத்து வருகின்றன. இதனால் ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பாரத பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் நல்ல நோக்கம் வீணடிக்கப்படுகிறது.

ஆகவே மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் பாரத பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்து கடுமையாக சட்ட நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் அனைவரும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்க தகுந்த உத்தர பிறப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News