நேரு குடும்பத்தினர் 'காந்தி' பெயரைப் பயன்படுத்துவது ஏன்? பின்னணி என்ன?
'நேரு' என போட்டுக்கொள்ள குடும்பத்தினர் வெட்கப்படுகிறார்களா என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்;
நேரு குடும்பத்தினர் 'காந்தி' பெயரைப் பயன்படுத்துவது ஏன்? நரேந்திர மோடி விமர்சனத்தின் பின்னணி என்ன?
நேரு குடும்பத்தினர் தங்களது பெயர்களுக்குப் பின்னால் 'நேரு' என போட்டுக்கொள்ள வெட்கப்படுகிறார்களா என பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். நேரு குடும்பத்தினர் தங்கள் பெயருக்குப் பின்னால் நேரு என்ற பெயரைப் பயன்படுத்தாமல் காந்தி என்ற பெயரை பயன்படுத்துவது ஏன்?
வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். மாநிலங்களவையில் பேசிய பிரதமர், "ஏதாவது ஒரு திட்டத்திற்கு நேருவின் பெயரைக் குறிப்பிட மறந்தால் அவர்கள் (காங்கிரஸ்) ஆத்திரமடைகிறார்கள். அவர் அவ்வளவு பெரிய மனிதராக இருந்தால் அவர்கள் குடும்பத்தில் யாரும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஏன் நேருவின் பெயரை பயன்படுத்துவதில்லை? நேருவின் பெயரைப் பயன்படுத்துவதில் என்ன வெட்கம்?" என்று கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "கடவுள்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மிகப் பொறுப்புமிக்க பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு இந்தியாவின் பண்பாட்டைப் பற்றித் தெரியவில்லை. அல்லது புரியவில்லை. அவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். தாய் வழித் தாத்தாவின் பெயரை யார் பயன்படுத்துகிறார்கள் என இந்த நாட்டில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்" என்றார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு குறித்து சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. உண்மையில், நேரு குடும்பத்தினர் ஏன் 'நேரு' என்ற பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் பயன்படுத்து வதில்லையா? இல்லை, இந்தக் கூற்றுத் தவறானது. நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள் தொடர்ந்து 'நேரு' என்ற பின்னொட்டையே தங்கள் பெயருக்குப் பின்னால் பயன்படுத்துகிறார்கள். நேரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் வாரிசுகள் தங்கள் கணவரது பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் பயன்படுத்துகிறார்கள். இந்திரா காந்தியின் விஷயத்தில் நடந்தது அதுதான்.
நேரு குடும்பத்தின் சமீப கால வரலாறு, ஜவஹர்லால் நேருவின் தாத்தாவான கங்காதர் நேருவிலிருந்து (1827-1861) தொடங்குகிறது. இவருக்கு பன்சிதர் நேரு, நந்தலால் நேரு, மோதிலால் நேரு என மூன்று மகன்கள். இவர்கள் மூவருமே தங்கள் தந்தையின் குடும்பப் பெயரான நேரு என்பதையே பயன்படுத்தினர்.
இதில் மோதிலால் நேருவுக்கு மூன்று குழந்தைகள்: ஜவஹர்லால் நேரு, விஜயலட்சுமி, கிருஷ்ணா. இவர்களில் ஜவஹர்லால் ஆண் வாரிசாக, 'நேரு' என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்தினார். விஜயலட்சுமி, குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ரஞ்சித் சீதாராம் பண்டிட்டை திருமணம் செய்துகொண்டு, விஜயலட்சுமி பண்டிட் ஆனார். கிருஷ்ணா திருமணம் வரை நேரு என்ற பின்னொட்டைப் பயன்படுத்திவந்தார். அவர் குணோத்தம் ராஜா ஹடீசிங் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு 'கிருஷ்ணா ஹடீசிங்' ஆக மாறினார். அவருடைய குழந்தைகள் ஹர்ஷாவும் அஜீத்தும், ஹடீசிங் என்ற பெயரையே பின்னொட்டாக வைத்துக்கொண்டனர். நேருவின் பெயரைப் பயன்படுத்தவில்லை. விஜயலட்சுமி பண்டிட்டின் குழந்தைகளும் பெண்களாக இருந்ததால் அவர்கள் தங்கள் கணவர்களின் குடும்பப் பெயரையே பின்னொட்டாகப் பயன்படுத்துகின்றனர்.
ஜவஹர்லால் நேருவைப் பொறுத்தவரை, அவரது ஒரே மகளா இந்திரா, 1917 நவம்பரில் பிறந்தார். அந்தக் குழந்தைக்கு தனது தாயின் பெயரான இந்திராணி என்பதை சற்று சுருக்கி, 'இந்திரா' என சூட்டினார் மோதிலால் நேரு. அந்தப் பெயருடன் 'பார்வைக்கு இனியவள்' என்ற பொருள்படும் பௌத்தப் பெயரான 'ப்ரியதர்ஷினி' என்ற பெயரையும் சேர்த்தார் ஜவஹர்லால்.
இந்திரா ப்ரியதர்ஷினி தனது திருமணம் வரை 'நேரு' என்ற குடும்பப் பெயரையே பயன்படுத்திவந்தார். ஜஹாங்கீர் ஃபரேதூன் காந்திக்கும் அவருடைய மனைவி ரட்டிமாயிக்கும் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர்தான் ஃபெரோஸ் காந்தி. இவர் பார்சி மதத்தைச் சேர்ந்தவர். இந்திராவும் ஃபெரோஸ் காந்தியும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்திராவைக் காதலிப்பதை ஃபெரோஸ் பலமுறை வெளிப்படுத்திவந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகே அந்தக் காதலை இந்திரா ஏற்றுக்கொண்டார். அது ஃபெரோசுக்கு மகிழ்ச்சியளித்தாலும், வேறு சில கவலைகளையும் தந்தது. குறிப்பாக, குடும்பப் பெயர் குறித்த அச்சம் இருந்தது.
இந்திராவின் தோழியான ஷாந்தா காந்தியிடம் இதைப் பற்றிப் பேசும்போது, "தான் இந்திராவை மணப்பதில் உறுதியாக இருந்தாலும், இந்திரா- இந்திரா காந்தியாவதற்குப் பதிலாக நேருவின் குடும்பம் ஃபெரோஸின் ஆளுமையைக் குறைத்து, அவரையும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவராக்கிவிடும்" என்று கவலையுடன் கூறியதாக இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான Indira: The Life of Indira Nehru Gandhi நூலை எழுதிய கேதரீன் ஃப்ராங்க் குறிப்பிடுகிறார்.
ஆனால், அப்படி நடக்கவில்லை. 1942ல் இந்திராவுக்கும் ஃபெரோஸ் காந்திக்கும் திருமணமானது. திருமணமான சில நாட்களுக்குப் பிறகு 'காந்தி' என்ற பெயரை இந்திரா எடுத்துக்கொண்டார். 1944 ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அவர்களுடைய முதல் குழந்தை பிறந்தது. இந்த சமயத்தில் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார்.
சிறையில் இருந்தபடி தன்னுடைய பேரனுக்கு பல பெயர்களை பரிந்துரைத்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால், எந்தப் பெயரும் சூட்டப்படாமலேயே நாட்கள் கழிந்தன. முடிவில், "ராஜீவ ரத்னா (இந்திரா விரும்பியபடி) என்ற பெயரையே வைத்துக்கொள்ளலாம். விரும்பினால், பிர்ஜீஸ் என்ற பெயரையும் சேர்த்துக்கொள்ளளாம். அதோடு நேரு என்பதையும் கூடுதலாகச் சேர்த்தால் எப்படியிருக்கும்? நேரு - காந்தி என இரட்டை பெயர் பெயருக்குப்பின்னால் இருக்க வேண்டுமென நான் நினைக்கவில்லை. அது நன்றாக இருக்காது. வெறும் 'நேரு' என்று மட்டும் இருக்கலாம்" என்று தனது கடிதம் ஒன்றில் கூறினார் ஜவஹர்லால் நேரு.
தனக்கு மகன் யாரும் இல்லாததால், தனது பெயரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல, பேரனின் பெயரைப் பயன்படுத்த நேரு விரும்பியிருக்கலாம் என்கிறார் கேத்தரீன் ஃப்ராங்க். ஆனால், குழந்தையின் பெயரை முதன் முதலில் எழுதும்போது Rajiva Ratna Birjees Nehru Gandhi என்று எழுதினார் இந்திரா காந்தி. இதில் 'ராஜீவ' என்பது தாமரையைக் குறிக்கும். 'கமலா' என்ற தனது தாயின் பெயரது பொருள் இருக்கும் வகையில் அந்த பெயர் சூட்டப்பட்டது. 'ஜவஹர்' என்பதற்கு ஆபரணம் என்பது பொருள். அதைக் குறிக்கும் வகையில் 'ரத்ன' என்ற சொல் சேர்க்கப்பட்டது. பிர்ஜீஸ், காந்தி ஆகியவை ஃபெரோஸ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பெயர்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ராஜீவ் காந்தி என்ற பெயரே நிலைத்துவிட்டது. இரண்டாவது மகனுக்கு சஞ்சய் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவரும் 'காந்தி' என்ற பின்னொட்டையே எடுத்துக்கொண்டார்.
பிறகு, ராஜீவின் குழந்தைகளான ராகுலும் பிரியங்காவும் 'காந்தி' என்ற பின்னொட்டைப் பயன்படுத்தினர். அவரது மனைவி சோனியாவும் அதே பின்னொட்டைப் பயன்படுத்தினார். சஞ்சயின் மனைவி மேனகா, அவர்களது குழந்தை வருண் ஆகியோரும் தந்தை வழியில் 'காந்தி' என்ற குடும்பப் பெயரையே பயன்படுத்தினர். இப்போது ப்ரியங்கா காந்தி தனது கணவரின் குடும்பப் பெயரான 'வத்ரா' என்பதையும் பயன்படுத்துகிறார். அவரது குழந்தைகள் 'வத்ரா' என்ற குடும்பப் பெயரையே பயன்படுத்துகின்றனர். வருண் காந்தியின் மகள் 'காந்தி' என்ற குடும்பப் பெயரையே பயன்படுத்துகிறார்.
அப்படியானால், 'நேரு' என்ற குடும்பப் பெயரை யாரும் பயன்படுத்துவதில்லையா? நேரு குடும்பத்தைச் சேர்ந்த சில ஆண் வாரிசுகள் 'நேரு' என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். மோதிலால் நேருவின் சகோதரரான நந்தலால் நேருவின் ஆண் வாரிசுகள் 'நேரு' என்ற குடும்பப் பெயரை இன்னும் பயன்படுத்துகிறார்கள். நந்தலால் நேருவின் கொள்ளுப்பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண், அருண் நேரு என்றே அழைக்கப்பட்டார். நந்தலால் நேருவின் மகன் ப்ரிஜ்லால் நேரு என்றும் அவரது மகன்கள் சுனில் நேரு, நிகில் நேரு, பிரஜ் குமார் நேரு என்று அழைக்கப்பட்டனர்.
நேரு குடும்பத்தினரைப் பொறுத்தவரை, தந்தை வழி குடும்பப் பெயர்களையும் கணவர் வழி குடும்பப் பெயர்களையும் பயன்படுத்தியதால்தான், இந்திராவில் ஆரம்பித்து அவரது சந்ததியினர் 'காந்தி' என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்த தொடங்கினர். நேருவுக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவரது வழியில் வந்தவர்களும் நேரு என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கக்கூடும்.