தமிழக காவல் துறை யாருடைய ஏஜென்சி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி
தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.;
தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை குறித்து பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த ராணிப்பேட்டை காவல் துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து, ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
யாருக்காக காவல் துறையினர் உள்ளனர்? பொது மக்களுக்காகவா? ஆளுங்கட்சியினருக்காகவா? எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி கேள்வியை எழுப்பினார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும் போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? என்றும் நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பினார்.
ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டு உள்ள அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார். ஒரு வேளை யாருக்கேனும் அனுமதி வழங்கி இருந்தால் காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக சொல்லி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.