பந்தாடப்படும் மேயர் பதவி: தேர்ந்தெடுக்கப்போவது மக்களா? கவுன்சிலர்களா?

ஒவ்வொரு முறையும் பந்தாடப்படும் மேயர் பதவிக்கான தேர்தல், இந்த முறை எவ்வாறு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2021-10-28 06:23 GMT

சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு, மாவட்டங்கள் பிரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

அண்மையில் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக பலத்த தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 4 மாதங்களில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவை உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

தற்போது சில பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் புதியதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவகாசம் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக 4 மாத காலத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் மேயர் பதவி தேர்வு முறை என்பது பந்தாடப்பட்டுதான் வருகிறது. 1996-ல் திமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதுவரை கவுன்சிலர்கள்தான் மேயரை தேர்ந்தெடுத்தனர். இதன்படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை ஸ்டாலின் பெற்றார்.

2001-ம் ஆண்டும் மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது சென்னை மாநகராட்சி மேயராக 2-வது முறையாக வென்றார் மு.க.ஸ்டாலின். ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஒரே நபர் இரு அரசு பதவிகளில் இருக்கக் கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வந்ததால், மேயர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின், எம்.எல்.ஏ. பதவியில் மட்டும் நீடித்தார்.

2006-ல் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் 2011-ல் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தது. 2016-ல் அதிமுக அரசே, மேயர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்ய சட்ட திருத்தமும் கொண்டு வந்தது.

தற்போதைய நிலையில் மாநகராட்சி மேயர் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் முறை கொண்டு வருவாரா அல்லது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கும் முறையை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News