விஜயபிரபாகரன் தொகுதியில் பிரச்சாரம் எப்போது? பிரேமலதா விளக்கம்!
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தன் பிள்ளைகளே என பிரேமலதா கூறியுள்ளார்;
பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அதிமுக கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்தின் போது பெரியகுளம் பகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளான மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, திண்டுக்கல் - சபரிமலை அகல ரயில் பாதை திட்டம், பெரியகுளம் நகரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் அதிகம் எடுப்பதற்கான திட்டம், பெரியகுளம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராதது குறித்த பிரச்சினை உள்ளிட்டவைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என வாக்குறுதிகளாக கொடுத்து அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில் அதிமுகவில் இருந்து பலர் பிரிந்து சென்றாலும் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்றும் கூறினார்.
இதற்கிடையில், மகன் விஜய பிரபாகரனுக்காக நீங்கள் வாக்கு சேகரிப்பில் ஏன் இன்னும் ஈடுபடவில்லை என பத்திரிக்கையாளர்கள் கேட்டகவே, அதற்கு 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தன் பிள்ளைகளே எனக் கூறியதோடு, தேனி மக்களவைத் தொகுதி பரப்புரையை முடித்துக் கொண்டு நாளை முதல் தன் மகன் பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரச்சாரக் கூட்டத்திலிருந்து விஜயகாந்தின் பெயரை குறிப்பிட்டு பேசுங்கள் என கூடியிருந்த தொண்டர்கள் கூறியதற்கு, இது தேர்தல் நேரம். இரட்டை இலைக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அதனால் தான் விஜயகாந்த் பற்றி ஆரம்பத்தில் பேசவில்லை. உங்கள் உள்ளத்தில் விஜயகாந்த் எப்படியோ அதே போல் தான் என் உள்ளத்திலும், ரத்தம், நாடி, நரம்பு, அணு என அனைத்திலும் இருக்கிறார் எனக்கூறி அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என பிரசாரம் மேற்கொண்டார்.