ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப். 27ம்தேதி இடைத்தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவர் முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ் .இளங்கோவனின் மகன் ஆவார். காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திருமகன் ஈ.வெ.ரா. தன்னை எதிர்த்து போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
அவரது உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தி. மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் கடந்த 10ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் திருமகன் ஈ.வெ.ரா. மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருமகன் ஈ.வெ.ரா. மறைவின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியாக காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டால்6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது ஜனநாயக மரபாகும். இந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மனுத்தாக்கல் தொடக்கம் - ஜனவரி 31
மனுத்தாக்கல் கடைசி நாள் - பிப்ரவரி 7
மனுக்கள் பரிசீலனை - பிப்ரவரி 8
வாபஸ் பெற கடைசி தேதி - பிப்ரவரி 10
வாக்குப்பதிவு - பிப்ரவரி 27
வாக்கு எண்ணிக்கை -மார்ச் 2