தமிழ்நாட்டில் என்ன வகை வைரஸ் பரவுகிறது?: தீவிர ஆராய்ச்சி
அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இல்லை, இன்புளூயன்சா வகை வைரஸ்கள் தான் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வகை வைரஸ்கள் பரவியபடி உள்ளன. இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமிக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.
அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா வகை வைரஸ்கள் தான் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்புளூயன்சா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன. அதில் எச்.3 என்.2 மற்றும் எச்.1 என்.1 வகையை சேர்ந்த வைரஸ்கள்தான் அதிகம் பரவி இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது.
சில மாநிலங்களில் அடினோ வைரஸ் என்ற வகை வைரசும் தீவிரமாக பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ்கள் அனைத்தும் இன்புளூயன்சா வைரசின் ஏ வகை பிரிவை சேர்ந்தவை ஆகும். இந்த வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களையும், முதியவர்களையும் பாதிப்பது தெரியவந்தது.
சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவைகளில் இந்த வைரஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் இந்த 3 வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஒரு மாதம் வரை கடும் அவதியை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக நீரிழிவு நோய், இதய நோய் இருப்பவர்களை இந்த வைரஸ்கள் தாக்கினால் கூடுதல் பாதிப்பு ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தீவிர ஆராய்ச்சி நடத்தியது. அதில் பெரும்பாலான மாநிலங்களில் 25 சதவீதம் அடினோ வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 70 சதவீதம் பேரை எச்.3 என்.2 வகை வைரஸ் தாக்குவது தெரிய வந்தது. இந்த வைரசால் தாக்கப்பட்டவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெரும் வகையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலை இருந்தது.
இதனால் இந்த வைரஸ்களை கண்டு பெரும்பாலானவர்கள் அச்சப்படாமல் தொடர்ந்து பணிகளில் செயலாற்றி வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் 99 சதவீதம் பேர் இந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மராட்டியம் மற்றும் தமிழ் நாட்டில்தான் புதிய வகை வைரஸ்கள் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி முதல் மார்ச் மாதம் 5-ம் தேதி வரை எடுத்த கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 5,451 பேர் எச்.3 என்.2 வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
எச்.1 என்.1 வகை வைரஸ்களில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை நாடு முழுவதும் 955 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 545 பேர் தமிழகத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் எந்த வகை வைரஸ் அதிகம் பரவி உள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த மாதம் மேற்கொண்ட மரபணு பகுப்பாய்வு சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ஒமிக்ரான் மற்றும் அதன் உட்பிரிவு வகைகளே தற்போது பெரும்பாலும் பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறுகையில், கொரோனா வைரஸின் மரபணுவை கண்டறிவதற்கான பகுப்பாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 75 சளி மாதிரிகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பிஏ-2 வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 57 சதவீதம் பேர் இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக எக்ஸ்.பி.பி. வகை தொற்றுக்குள்ளானோர் 39 சதவீதம் பேரும் பிஏ-5 தொற்றுக்குள்ளானோர் 3 சதவீதம் பேரும் உள்ளனர்.
இரண்டாம் அலையின் போது பரவிய டெல்டா வகை தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த தரவுகளின் வாயிலாக தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.