வேட்பாளர் டெபாசிட் தொகை எவ்வளவு ? யார், யார் எவ்வளவு செலவு செய்யலாம் : தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர்கள் எவ்வளவு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும், யார், யார் எவ்வளவு செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான டெபாசிட் தொகை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1000 ரூபாயும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாயும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். இதர வகுப்பைச் சேர்ந்தவர்கள், பேரூராட்சி கவுன்சிலருக்கு 1000 ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாயும் கட்ட வேண்டும்.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4,000 ரூபாயை செலுத்தி, வேட்புமனுவைத் தாக்கல் வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், பிரசாரத்திற்காக 17,000 ரூபாய் வரை செலவிடலாம்.
முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளில் வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புவோர், 34,000 ரூபாய் வரையிலும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ 85 ஆயிரம் செலவு செய்யலாம்,
சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களும் 85,000 ரூபாய் வரை செலவிடலாம். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் 90,000 ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.