சனாதனம் என்றால் என்ன? மீண்டும் தமிழக ஆளுனர் சர்ச்சை விளக்கம்
சனாதனத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது; சனாதனம், மதம் என்பது வேறு, வேறு எனக்கூறி, தமிழக ஆளுனர் ரவி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், சென்னை வானகரத்தில், 'ஹரிவராசனம்' பாடல் இயற்றப்பட்ட 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய ஆளுனர் ரவி, இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக அரசியல் கட்சிகள், ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தின. இதையடுத்து, ஒரு மாநிலத்தின் உயர் பதவி வகிக்கும் நிலையில், மதங்களுக்கு அப்பாற்பட்டவரான ஆளுனர் இப்படி மேடையில் ஒரு மதம் சார்ந்து பேசலாமா? என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், மீண்டும் சனாதனத்திற்கு பொருள் கூறி, ஆளுனர் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.
தற்போது, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் ஆளுனர் ரவி பேசுகையில், சனாதனமும் மதமும் வேறு, வேறு. சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என அழுத்தம் திருத்தமாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் காந்தி, விவேகானந்தர் கூறிய ஆன்மிக வழியில் மக்கள் சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கியுள்ளதாகவும், சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் எனக் கூறுவது சனாதன தர்மம் இல்லை எனவும் ஆளுனர் ஏற்கனவே தன் பேச்சுக்கு கிளம்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பேச்சு மீண்டும் சனாதனம் குறித்த விவாதத்தை தமிழகத்தில் கிளப்பி விட்டுள்ளது.