சசிகலா 'ரீ என்ட்ரி' அ.தி.மு.க.வில் அடுத்து நடக்க போவது என்ன?

சசிகலா 'ரீ என்ட்ரி' விவகாரத்தினால் அ.தி.மு.க.வில் அடுத்து நடக்க போவது என்ன? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

Update: 2022-03-03 15:44 GMT

50 ஆண்டு பொன் விழா கொண்டாடிய அ.தி.மு.க. என்ற பேரியக்கத்திற்கு இவ்வளவு பெரிய சோதனை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் வந்து சேரும் என அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்கள் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து தேர்தலில் வெற்றிபெற்ற மன்ற உறுப்பினர்கள் நேற்று தான் பதவி ஏற்றிருக்கிறார்கள். நாளை நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் பதவி ஏற்க இருக்கிறார்கள்.

21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றி விட்ட நிலையில் ஒருசில நகராட்சிகள், பேரூராட்சிகளில் மட்டுமே அ.தி.மு.க. தலைமைபதவி ஏற்க உள்ளது அக்கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி அருகே தனது பண்ணை வீட்டில் நடத்திய ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வில் ஒரு கலகத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அவரது மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலாளர் என அறிவிக்கப்பட்ட வி.கே. சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த கலகத்திற்கு காரணம்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து எந்த ஓ.பி.எஸ். சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ அதே ஓ.பி.எஸ். தலைமையில் இப்போது ஒரு குழுவினர் மீண்டும் அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என ரகசிய தீர்மானம் போட்டு இருப்பது அ.தி.மு.க.வில் என்னதான் நடக்கிறது என்ற ஒரு கேள்வியை தொண்டர்கள் மத்தியில் எழ வைத்துள்ளது.

தான் நடத்திய ரகசிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை செயலாக்கும் விதமாக ஓ.பி.எஸ். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை தனது ஆதரவாளர்கள் மூலம் அணி திரட்டி வருவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடுத்த முடிவை முறியடிக்கும் விதமாக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தனது ஆதரவு முன்னணி தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் இன்னொரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவி இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக சேலம், கோவை மாவட்டங்களில் அதிக இடங்களை பெற்றிருந்ததால் அது இ.பி.எஸ். க்கு பெரும் பலமாக கருதப்பட்டது. ஆனால் அந்த பலம் என்ற பிம்பம் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் அமைச்சர்களான கே. என். நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் போட்ட திட்டங்களின் காரணமாக அடித்து நொறுக்கப்பட்டு இருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியாதது இ.பி.எஸ் .க்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது.

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அவரது மறைவைத் தொடர்ந்து இரண்டாக பிளவுபட்டு கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா தலைமையில் இயக்கம் ஒன்று சேர்ந்து மீண்டும் புத்துயிர் பெற்றது. முடக்கப்பட்ட சின்னம் கிடைத்ததும் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது அ.தி.மு.க.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் அ.தி.மு.க.மீண்டும் உடைந்தது. அப்போது தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் சையும் இ.பி.எஸ். சையும் பிரதமர் மோடி ஒன்று சேர்த்து வைத்தார். ஆனால் இப்போது அது போன்ற ஒரு முயற்சி எடுக்க மோடி முன் வருவாரா என தெரியவில்லை. ஏனென்றால் அன்று அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தது. இன்று பதவியில் இல்லை என்பதால் இப்போது ஓபிஎஸ்- இபிஎஸ் இடையில் ஏற்பட்டுள்ள இந்த உரசல் எங்கே போய் முடியும் என தெரியவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தொடருமேயானால் அடுத்தடுத்து அரங்கேறி வரும் காட்சிகளால் அ.தி.மு.க. மீண்டும் உடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

சசிகலா அ.தி.மு.க.வில் ரீ-என்ட்ரி ஆகும் பட்சத்தில் அவருக்கு வலுவான பதவி கொடுக்கப்பட்டால் மீண்டும் அ.தி.மு.க. உடைந்து கட்சி சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அ.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளனர்.

Tags:    

Similar News