நீதிமன்றங்களில் ஏப்ரல் 17 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்
அனைத்து நீதிமன்றங்களிலும் ஏப் 17 ஆம் தேதி முதல் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
பைல் படம்
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவி வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மார்ச் 10 ஆம் தேதி முதல் காணொலி காட்சி மூலமும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வசதியையும், வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 17 ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பணிபுரியும் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும், வழக்கு பட்டியலில் இல்லாத வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும், நுழைவாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனத்து கீழமை நீதிமன்றங்களுக்கு இதேபோன்ற கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் பிறப்பிக்கும்படி தலைமை பதிவாளர் தரப்பில் மற்றொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், காவலர்கள் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.