விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கும் தொண்டர்கள்

விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டு தேமுதிக தொண்டர்கள் தங்களது ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.

Update: 2023-12-28 12:28 GMT

விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா பீச்சில் இடம் அளிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.15 மணிக்கு காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரைத்துறை மற்றும் அரசியல் கட்சியினரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால், விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கோயம்பேடு தலைமை அலுவலகமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. விஜயகாந்த் உடலை கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

முன்னாள் முதல்வர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் விஜயகாந்த் உடலையும் அடக்கம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஒருசில தொண்டர்கள், ரொம்ப அதிகம் எல்லாம் இடம் வேண்டாம். பத்துக்கு பத்து அளவில் இடம் தந்தால் மட்டும் போதும் என்றும் கூறி வருகின்றனர்.

தங்களது கட்சி தலைவர் மீது உள்ள அன்பின் காரணமாக தே.மு.தி.க. தொண்டர்கள் இந்த கோரிக்கையை வைக்கலாம். மெரினா கடற்கரையில் முதல்வராக இருந்த தலைவர்களது உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. விஜயகாந்த் ஒரு கட்சியின் மரியாதைக்குரிய தலைவர் தான் என்றாலும், எதிர்க்கட்சி தலைவராக தான் இருந்தார். முதல்வராக பதவி வகிக்கவில்லை. ஆதலால் மெரினாவில் அவரது உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை என பொதுவாக கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News