டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.
எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளைப் படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எத்தகைய துயரத்தை அளித்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். செல்வன். விஷ்வா தீனதயாளன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.