எஸ்பி.,க்கு மொட்டை கடிதம் எழுதிய காவலர்

Update: 2021-01-05 06:00 GMT

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி க்கு சென்ற மொட்டை கடிதத்தால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட எஸ்பி., முகவரிக்கு விழுப்புரம் ஆயுதப்படை காவல் வளாகத்திலிருந்து அதில் பணியில் உள்ள காவலர் ஒருவர் எழுதியதாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அக்கடிதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நான் ஆயுதப்படை காவல்துறை 2013 முதல் பணியாற்றி வருகிறேன். இதனிடையே கடந்த ஓராண்டு சென்னைக்கு மாறுதலாகி சென்று மீண்டும் இருப்பிடத்துக்கே வந்து காகுப்பம் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறேன். என்னுடன் எனது பேச் -சில் பணியில் சேர்ந்த பலரும் காவல் நிலையங்களுக்கு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், எனக்கு மட்டும் காவல் நிலைய பணிக்கு அனுமதி வழங்காமல் ஆயுதப்படை வளாகத்தில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனையில் உள்ளேன்.இது தொடர்பாக பலமுறை ஏற்கனவே இருந்த ஜெயக்குமார் எஸ்.பி யிடமும் இப்போதுள்ள ராதாகிருஷ்ணன் எஸ்பி யிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் மாற்றம் செய்யவில்லை.

கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அதிகம் பேர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர். ஆனால் என்னை ஏனோ மாற்றம் செய்யாமல் முடக்கி வைத்துள்ளனர். இனிமேல் உயிர் வாழ்வது அர்த்தமில்லாதது என்பதால் எனக்கு பிறகாவது ஆயுதப்படை பிரிவில் போலீஸாருக்கு விமோசனம் கிடைத்தால் நல்லது. என்னை பழி வாங்கிய காவல் கண்காணிப்பாளர் குடும்பத்தோடு நலமாக இருக்கட்டும் என்று நீண்ட குறைகளுடன் தனது தற்கொலைக்கு காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்ற அடிப்படையில் பெயர் முகவரி இல்லாத ஒரு கடிதத்தை ஆயுதப்படை காவலர் ஒருவர் அனுப்பியுள்ளார். இது விழுப்புரம் மாவட்ட காவல் சரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது அப்படி ஒரு கடிதம் ஏதும் வரவில்லை சமூக வலைதளங்களில் வந்ததாக தகவல் கிடைத்தது அது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணனுக்கு பெயர் குறிப்பிடாத தபால் வந்ததையடுத்து இந்த கடிதத்தை படித்த எஸ்.பி., ஆயுதப்படை போலீஸ் பயிற்சி வளாகத்திற்கு சென்று அங்குள்ள போலீசாரிடம் பேசி குறைகளை கேட்டார். அப்போது அங்கு பேசிய அவர் , எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய முறையில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். உங்கள் பிரச்சனைகளை என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு முறையிடலாம். இதுபோல யார் என தெரியாமல் கடிதம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். பின்னர் எஸ்.பி., தனக்கு வந்த கடிதத்தை அங்கிருந்த தகவல் பலகையில் ஒட்டிவிட்டு சென்றார்.

Tags: