கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் கலந்தாய்வு: காணொலி மூலம் நடைபெற்றது
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காணொலி மூலம்பங்கேற்று உரையாற்றினார் .;
2022-23 ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த காணொலி கலந்தாய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார் .
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தலைமையில் 2022-23ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயார் செய்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர்கள், செயலர்கள், பிற மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.கே.ஆர். பெரியகருப்பன் இக்காணொலி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது 2022-23ம் நிதியாண்டிற்கான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயார் செய்வதற்காக, இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் டிசம்பர் 31 வரை தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் துவக்கப்படும் என தெரிவித்தார். ஊராட்சியிலுள்ள வள ஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். இக்காணொலி வாயிலாக பெறப்படும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் மக்கள் திட்டமிடல் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபையிலும் விவாதிக்கப்பட்டு முழுமையான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் திட்டமிடல் இயக்கம் கிராம ஊராட்சிகளில் உள்ள வள் ஆதாரங்கள், தேவைகள், எடுக்கப்பட உள்ள பணிகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து ஆய்வு செய்து கண்டறிந்து ஒரு முழுமையான திட்டம் தயார் செய்ய உதவிகரமாக இருக்கும். கிராம ஊராட்சிக்கு மட்டுமல்லாது வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிக்கும் ஆண்டு வளர்ச்சி திட்டங்கள் தயார் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர்.கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
இக்காணொலி கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பிரவீன் பி. நாயர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.