சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ரவியை சந்தித்த துணைவேந்தர் ஜெகநாதன்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த தமிழக ஆளுநர் ரவியை துணைவேந்தர் ஜெகநாதன் சந்தித்து பேசினார்.
முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் (PUTER) என்ற நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களையே அதிகார துஷ்பிரயோகம் செய்து பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்தது.
மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் துணைவேந்தர் ஜெகநாதன் வெளியே வந்து உள்ளார்.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி இன்று வருகை தந்துள்ளார். முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமினில் உள்ள நிலையில் அவர் ஆளுநரை வரவேற்றார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மாணவர் இயக்கங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டினர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டி கண்டன கோஷம் எழுப்பினர்.
எதிர்ப்புகளை மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பெரியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வந்துள்ளதற்கு இடையே, காலை முதலே முறைகேடு வழக்கில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவியது.
ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய ஒரு துணைவேந்தரை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு செல்வது, ஊழல்வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், வழக்கை திசை திருப்பவும், சாட்சியங்களை களைப்பதற்கும் முறைகேடுகளல் ஈடுபட்டவர்களை மறைமுகமாய் காப்பாற்ற நினைக்கிறாரா ஆளுநர் என மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
ஆளுநர் வருகை மற்றும் துணைவேந்தர் அவருடன் சந்திப்பு, ஆளுநருக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் கருப்பு கொடி காட்டிய சம்பவம், போலீசார் அவர்களை கைது செய்த சம்பவங்கள் இன்று சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.