சிவகங்கை சீமையின் வீரமங்கை வேலு நாச்சியார்..
Rani Velu Nachiyar History in Tamil-இராணி வேலு நாச்சியார் என்ற பெயரை கேட்டாலே அவரின் வீரமும், ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போர்களும் தான் நினைவுக்கு வரும்.;
Rani Velu Nachiyar History in தமிழ் -சிவகங்கை சீமையின் வீரமங்கை வேலு நாச்சியார்..
Rani Velu Nachiyar History in Tamil
வேலு நாச்சியார் பிறந்த ஊர் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊர். இராமநாதபுர சேதுபதியான வேலுநாச்சியாரின் தந்தை பெயர் செல்லமுத்து தேவருக்கும், 'சத்தந்தி' முத்தாத்தாள் நாச்சியருக்கும் 1730-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலுநாச்சியார் என பெயரிட்டனர்
அரசுரிமைக்கு ஆண் வாரிசைதான் அரசர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. பெண் குழந்தை பிறந்து விட்டதே என செல்லமுத்து தேவர் மனம் வருந்தவில்லை. வளரும் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள் வீச்சு, சிலம்பம், வளரி என்ற ஆயுதத்தை கையாளல் போன்ற போர்கள பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார்.
சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.
வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வேலுநாச்சியாரும் பயிற்சிகளை மிகவும் கவனத்துடன் கற்றுக் கொண்டார். பயிற்சி பெறுகின்ற போதே ஒருவருக்கு ஒருவர் என்பதை போல வாள் பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், தன்னை சுற்றி பத்து பேர்களை நிற்க வைத்து கடுமையாக பயிற்சி பெற்றார்.
மகளுக்கு தாய்மொழி தமிழை மட்டும் சொல்லி கொடுக்காமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என ஆறு மொழிகளை யும் சொல்லிக் கொடுத்து, பன்மொழி புலமையாளராக வும் திறமை பெற வைத்தார் செல்லமுத்து தேவர்.
வேலுநாச்சியார் வரலாறு தன் மகள் திருமண வயதிற்கு மேலான வயதை பெற்று நிற்பதை கண்டார். அப்போதெல்லாம் 12, 13 வயதில் திருமணம் செய்து விடுவது வழக்கம்.
தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை பாளையத் தாரிடையே பார்த்தார். தன் மகளுக்கு இணையான வீரராய் மருமகன் இருக்க வேண்டும் விரும்பினார். சிவகங்கை சீமையை ஆளும் முத்துவடுக நாதரே தன் மகளுக்கு ஏற்ற மணாளர் என்பதை உணர்ந்து அவருக்கே 1746-ல் திருமணம் முடித்து வைத்தார்.
அவருக்கு வேலுநாச்சியாரின் போர்கள செயல்கள் பிடித்திருந்தனர். அவரின் கீழ் இரண்டாயிரம் படை வீரர்களை பிரித்துக் கொடுத்தனர். 16 வயதிலேயே வேலுநாச்சியாருக்கு ஒரு படைக்கு தளபதியாக திகழ்ந்தார். இவருக்கு பின் கௌரி நாச்சியாரை 2-வதாக மணந்தார் முத்து வடுக நாதர்.
சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது.
நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான்.சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.
25.06.1772 அன்று நள்ளிரவு பூஜையில் கலந்துக் கொள்ள காளையார் கோவிலில் காண்டிருக்கும் காளிஸ்வரரை தரிசிக்க தன் இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் முத்துவடுக நாதர் கோவிலில் தங்கியிருந்தார். கோவிலுக்கு வெளியே சிறு படை இருந்தது. திடீரென்று கோவிலை சுற்றி தளபதி பான்ஸோர் பெரும்படை நின்றது.
நேரில் மோத தைரியம் இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் இறைவனுக்கு பூஜை செய்யும் போதா, வந்து தாக்குவது பேடிகளே' என்று குமுறிய முத்து வடுக நாதர் ஆங்கிலேய படையோடு மோதினார்.
பான்ஸோர் பீரங்கியோடு வந்திருந்தான். அதன் மூன் வாள்வீச்சு எடுபடவில்லை. கடும்போரில் பல வெள்ளைய தலைகளை பறித்த முத்து வடுக நாதர், அப்போரில் மனைவியுடன் வீரமரணம் அடைந்தார்.
திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். பகலில் படை நடத்தி போர் நடத்தாமல், இரவில் ஆந்தைகள் போல் வந்து போர் நடத்தி தன் வீரக் கணவரின் உயிரை பறித்து விட்டார்களே என்று பொங்கி எழுந்தார் வேலு நாச்சியார். ஆனால் எதிர்த்து போர்புரிய அது தக்க சமயமில்லை என மருது சகோதரர்கள் கூறியதன்பேரில் வேலுநாச்சியார், தன் மகள் வெள்ளச்சி நாச்சியாரோடும், தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்களோடும் சிறு படையோடு திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள விருப்பாட்சி என்ற ஊருக்கு சென்றார்
அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது என்பது தான் வேலு நாச்சியாரின் லட்சியமாக இருந்தது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார் வேலு நாச்சியார்.
முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு "சின்ன மருதை தளபதியாகவும்", இன்னொரு படைக்கு "பெரிய மருதுவுடன்" இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.
இதில் குறிப்பிட வேண்டியது, குயிலி என்னும் வீர பெண்மணியை. ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை அழிக்க வேலு நாச்சியார் திட்டமிட்டார். அதற்கு துணை நின்றவர் இந்த குயிலி. இவரின் செயலை கண்டு மிரளத்தவர் யாரும் இருக்க முடியாது.
நவராத்திரி அன்று முதன் முதலில் ராஜா ராஜேஸ்வரி கோவிலில் நுழையும் போது, குயிலியை தவிர எல்லோரும் கோவிலுக்குள் சென்று விட்டனர். அங்கு விளக்கேற்ற வைத்து இருந்த எண்ணையை தன் மேல் ஊற்றி கொண்டே ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கு பக்கம் சென்ற குயிலி. தன்மீது நெருப்பை பற்ற வைத்து வெற்றி வேல், வீர வேல் என்று கூறிக்கொண்டே ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை அளித்தார். வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு இருக்கும் வரையிலும் இந்த வீர தாய் குயிலியின் வரலாறும் இருக்கும்.
நவாப் மற்றும் ஆங்கிலேய படைக்கு எதிராக முன்முனை தாக்குதலை நடத்தினார். வேலுநாச்சியாரின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் எதிரி படைகள் தடுமாறின. மும்முனை கடும் தாக்குலை சமாளிக்க முடியாமல் நவாப் மற்றும் ஆங்கிலேய படைகள் சிவகங்கை சீமையை விட்டு ஓடினர்
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
1780-ம் ஆண்டு பொது மக்களின் வெற்றி முழக்கத்தோடும் பெரும் வரவேற்போடும் எட்டு ஆண்டுகள் கழித்து, தமது மண்ணில் காலடி பதித்தார் வேலுநாச்சியார். வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.
மருது சகோதரர்களின் துணைக் கொண்டு, தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊருணிகள், குளங்களை வெட்ட ஏற்பாடு செய்தார் வேலுநாச்சியார். இதனால் விவசாயம் பெருகியது. தனது ஆட்சிக்குட்பட்ட பல ஊர்களுக்கு சாலை களை அமைத்தார். அழகன் குளம், குடியூர், திருப்பத் தூர், குன்றக்குடி, மானாமதுரை போன்ற ஊர்களின் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை மேம்படுத்த, வணிகம் வளர்ந்தது.
காளையார் கோயில் கோபுரம் பாழடைந்து கிடப்பதை கண்டு . கோவில் கோபுரத்தை அழகாக உயர்த்தி கட்டினார். இன்றும் கோவில் கோபுரம் கம்பீரமாக நிற்கிறது என்றால் வேலுநாச்சியாரின் உபயம்தான். இராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்தார். ஏழ்மை இல்லாத நாடாக தன் சீமையை மாற்றி அமைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல் பட்டார்.
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.
இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். 1857- சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட முதல் குரல் என்கிறார்கள்.
ஜான்சிராணி பிறந்தது 1830. இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் வேலுநாச்சியார். ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார் தான்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2