வேலூர் மக்களவைத் தொகுதி : ஒரு பார்வை

தமிழ்நாட்டில் உள்ள 32 பொதுத்தொகுதிகளில் வேலூரும் ஒன்று. சிப்பாய் கலகத்திற்கு வித்திட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது;

Update: 2024-03-16 10:19 GMT

வேலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் எட்டாவது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இந்த மக்களவை தொகுதியில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர் மற்றும் ஆரணி சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

தற்போது தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பிறகு, இந்த தொகுதியில், வேலூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 32 பொதுத்தொகுதிகளில் வேலூரும் ஒன்று. சிப்பாய் கலகத்திற்கு வித்திட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தொகுதி, முதலியார், வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அதிகளவில் கொண்டுள்ளது. இஸ்லாமியர்களும் கணிசமாக உள்ளனர்.

வட இந்திய வியாபாரிகளும் இங்கு அதிகம். விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில், நெல்,தென்னை,கரும்பு, காய்கறி வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலுள்ள தோல் தொழிற்சாலைகள், குடியாத்தத்தில் கைலி, பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூலமும் அன்னிய செலாவணி ஈட்டப்படுகின்றது. படித்தவர்கள் நிறைந்த தொகுதியாக இருப்பினும் ஏழை கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். பீடி சுற்றும் தொழிலும் கணிசமான அளவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில், ஏப்ரல் 18 ஆம் தேதி இந்த தொகுதிக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அந்நிலையில் திமுகவின் வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத தொகையை மீட்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

1951 ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் (காமன்வீல் கட்சி & காங்கிரஸ்)

1957 எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி (காங்கிரஸ்)

1962 அப்துல் வாகித் (காங்கிரஸ்)

1967 குசேலர் (திமுக)

1971 ஆர். பி. உலகநம்பி (திமுக)

1977 வி. தண்டாயுதபாணி (நிறுவன காங்கிரஸ்)

1980 ஏ.கே.ஏ. அப்துல் சமது (சுயேட்சை)

1984 ஏ.சி.சண்முகம் (அதிமுக)

1989 ஏ.கே.ஏ. அப்துல் சமது (காங்கிரஸ்)

1991 அக்பர் பாஷா (காங்கிரஸ்)

1996 பி. சண்முகம் (வேலூர்) (திமுக)

1998 என். டி. சண்முகம் (பாமக)

1999 என். டி. சண்முகம் (பாமக)

2004 கே. எம். காதர் மொகிதீன் (திமுக)

2009 எம். அப்துல் ரஹ்மான் (திமுக)

2014 பி. செங்குட்டுவன் (அதிமுக)

2019 கதிர் ஆனந்த் (திமுக)

வேலூர் தொகுதியின் பிரச்னைகள்

பாலாற்றில் பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததும், தொடர்ந்து அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டிருப்பதும் வேலூர் தொகுதியின் மிக முக்கியப் பிரச்னையாகும்.

தோல் கழிவுநீரால் நிலத்தடி நீராதாரம் பல கிராமங்களில் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள், கரும்பு விவசாயிகள் அதிகமுள்ள இந்தத் தொகுதியில் உற்பத்திக்கு ஏற்ற வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதோடு, தோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள இத்தொகுதியில் தோல் தொழில் மண்டலம், தோல் தொழில் பூங்கா, மத்திய தோல் ஆராயச்சி நிலையக் கிளை, தோல் தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவை அமைக்க வேண்டும் என்பன நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.

வேலூர் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டாலும், தற்போது வரை அது பயன்பாட்டிற்கு வராதது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News