இனி மதிமுக வை நடத்தும் ஆற்றல் வைகோவிடம் இல்லை - திருப்பூரில் துரைசாமி தாக்கு
Tirupur News,Tirupur News Today- மதிமுக கட்சியை நடத்தும் ஆற்றல், இப்போது வைகோவிடம் இல்லை. இனிமேல் அவரால் கட்சியை நடத்த முடியாது என, திருப்பூரில் அக்கட்சியின் முன்னாள் அவைத்தலைவர் துரைசாமி கூறினார்.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் துரைசாமி - வைகோ (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் துரைசாமி, தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவர். நீண்டகால அரசியல்வாதி. எம்ஜிஆர், கருணாநிதி அரசியல் நடத்திய காலகட்டங்களிலேயே, பரபரப்பாக பேசப்பட்டவர். சமீபத்தில் அவர் மதிமுகவை விட்டு விலகினார். கட்சியின் நலன் கருதி ம.தி.மு.க.-வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என, அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்த வைகோ, 'தி.மு.க.-வில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. துரைசாமி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும், என்றார். இதையடுத்து திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் இருந்து விலகினார். இதனிடையே ம.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வருகிற 14-ம் தேதி சென்னையில் நடைபெறும் ம.தி.மு.க. 29-வது பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் திருப்பூரில் இன்று துரைசாமி நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்றுதான் வைகோ கூறுகிறார். அப்படியானால் எதுக்கு தனிக்கட்சி நடத்த வேண்டும். தி.மு.க.வுடன் இணைக்க வேண்டியது தானே என்பதுதான் எனது கேள்வி. வைகோவிற்கு இப்போதைய நிலையில் திறமை, ஆற்றல் எதுவுமே இல்லை. இனியும் அவரால் பழைய ஆற்றலுடன், திறமையாக கட்சியை நடத்த முடியாது. நான் விலகுவதாக அறிவித்த பின்னர் எந்த தகவலும் கட்சியில் இருந்து இதுவரை வரவில்லை.
தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுகின்றனர். 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின்., வைகோ கையெழுத்து போடும்போது நானும் உடன் இருந்தேன். அப்படியிருக்கும் பட்சத்தில், எப்படி நான் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
மதிமுக வை பொருத்தவரை, மிக நீண்ட காலம் துரைசாமி அக்கட்சியின் முக்கிய மாநில நிர்வாகியாக பொறுப்பு வகித்தவர். அக்கட்சி சார்பில், வேட்பாளராகவும் போட்டியிட்டவர். திருப்பூரில் உள்ள கட்சி நிர்வாகிகளில் அவரும் ஒரு மூத்த முன்னோடியாக, அரசியலில் ஆழ்ந்த அனுபவம் மிக்கவராக இருந்து வருகிறார். இந்நிலையில், வைகோ - துரைசாமி இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவும், அரசியல் பயணத்தில் இருவரும் ஒத்த கருத்துடனும் நீண்ட காலம் பயணித்த நிலையில் அவர் கட்சிக்கு எதிரான விமர்சனங்களை வைத்ததும், அதற்கு பின் கட்சியை விட்டு விலகி கொண்டதும் திருப்பூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அவர் அதிமுக அல்லது திமுக இவற்றில் ஏதேனும் ஒரு கட்சியில் இணையவும் வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதே வேளையில், மதிமுகவில் திருப்பூர் மாநகர செயலாளராக இருந்த சிவபாலன், சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு மாறி, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதில் தோல்வியடைந்தார். இப்போது திமுகவில் இருந்து வருகிறார். அதே போல், துரைசாமியும் வேறு ஏதேனும் கட்சிக்கு மாற வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.