தமிழகத்தில் இன்று 40 ஆயிரம் மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க இன்று ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என, 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த மையங்களில், 19 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி முகாம் குறித்து அரசு வெளியிட்டுள்ள .வழிகாட்டு நெறிமுறைகளில்,
கொரோனா தடுப்பூசி மையங்கள் காலை 7:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும், போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்பூசி செலுத்திய பின், ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் பாதுகாப்பான முறையில் நடைபெற, கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கை கழுவுதல் கட்டாயமாகும். தடுப்பூசி போடும் முன், சோப்பை கொண்டு கைகழுவுவது அல்லது கிருமி நாசினி உபயோகப்படுத்துவது கட்டாயம்.
பெரியவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால், மையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
பயனாளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வர வேண்டும். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களை ஒட்டிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்
இப்பணியில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவர். அனைத்து மையங்களிலும், போதுமான காவல் துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். மூன்றாவது அலையை தவிர்ப்பதற்காக, கொரோனா நோயில் இருந்து விடுபடவும், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறவும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்டுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.