அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு எழுதுவதை அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 12- ஆம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 26 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடக்க உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தேர்வு பயத்தால் கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் 50 ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் எழுதவில்லை. தேர்வு பயத்தால் தேர்வு எழுதுவதையே தவிர்த்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
எனவே, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை 100 சதவீத மாணவர்களும் எழுதுவதை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். இதற்காக பள்ளிகள் அளவில் தேர்வு எழுதுவதில் பிரச்னை ஏற்படக்கூடிய மாணவ, மாணவிகளை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும்.
குடும்பச் சூழல், வறுமை, தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்தவர்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு, கவுன்சிலிங் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
இதற்கு பள்ளிகளின் அருகில் உள்ள, பள்ளிகள் அமைந்துள்ள ஊரில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ சமூகநல அமைப்புகள், வணிகர்களின் உதவிகளைப் பெறலாம். இதற்காக மாவட்ட அளவில் கல்வித்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் , மாணவர்களின் நலனுக்காக உதவி செய்யக்கூடிய நிலையில் ( ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்) உள்ளவர்களைக் கொண்ட குழுக்களை அமைக்கலாம்.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். தேர்வு பயத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டால், அது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். தேர்வு பயத்தால் படிப்பை பாதியில் விட்டவர்கள் தவறானப் பாதைக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
அதனால்தான், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் கலந்துரையாடி நம்பிக்கை அளித்து வருகிறார். பாரத பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், தங்கள் தேர்வுகளை பண்டிகை போல் கொண்டாடி மகிழும் வகையில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் - தேர்வு மாவீரர்கள்- பரீட்சைக்கு பயமேன் என்ற தலைப்பில் நம் தமிழ் மொழியிலும் வெளிவந்துள்ளது.இந்நூலை தேர்வு எழுத தயாராகி வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.
தமிழக முதல்வரும் இந்த ஆண்டு நேரடியாக மாணவர்களின் தேர்வு விஷயத்தில் அக்கறை எடுத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் தமிழக கல்வித்துறைக்கு போதிய வழிகாட்டல் வழங்கி, மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கி தமிழகத்தின் 100 சதவீத மாணவர்களும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்கள் மேல் தேவையற்ற அழுத்தத்தை அவர்களது பெற்றோரும், ஆசிரியர்களும் திணிக்காமல் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக்கூடிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.