நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழக அளவில் கரூர் திமுக முன்னணி
கரூரில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனுக்களை வழங்கத் தொடங்கியுள்ளது.;
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விருப்ப மனுக்களை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அண்மையில் நடந்து முடிந்தன. இந்த தேர்தலில் பெரும்பான்மையாக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனுக்களை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வழங்கினார்.
கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி 3 நகராட்சி 8 பேரூராட்சிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ள திமுகவினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினர். இன்று முதல் மூன்று நாட்கள் வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளிலேயே 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்வமுடன் வந்து விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.
உள்ளாட்சி தேர்தல் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கான மனுக்களை வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மொஞ்சனூர் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் மணிராஜ், நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.